கோயம்புத்தூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயகம் காப்பாற்றப்படவும் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் ஏற்படும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்படவும் இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லை என்று சொன்னால் நாடு பேராபத்தைச் சந்திக்கும். இந்தியா கூட்டணி ஏற்பட தமிழ்நாடு தான் முக்கிய காரணம் குறிப்பாக மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணியில் அங்கம் பெற்று இருக்கிற கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது.
இந்திய அளவிலும் நல்ல கூட்டணி உருவாகி இருக்கிறது. பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தொகுதி உடன்பாடுகள் நல்ல முறையில் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியினுடைய அராஜகங்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாகப் பேசிய அவர், "தேர்தல் ஆணையத்தில் அங்கம் வகித்த அருண் கோயல், திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் ஏன் ராஜினாமா செய்தார்? ராஜினாமா ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது? என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். தற்போது அருண் கோயலும் ராஜினாமா செய்திருக்கிறார் தற்போது தலைவர் மட்டுமே மீதம் இருக்கிறார். ராஜினாமா செய்த அருண் கோயல் ஏன் ராஜினாமா செய்தார் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் அல்லது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களுக்கு என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், "பிரதமர் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் அப்போதெல்லாம் ஊழல் பற்றி அவர் பேசுகிறார். நேரு காலம் முதல், பிரதமர் நிவாரண நிதி என்ற ஒரு நிதி மத்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அது நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். அதற்கு வரவு செலவு கணக்கு உண்டு. அதுகுறித்து தகவல் உரிமைச் சட்டத்திலும் கேட்டுப் பெற முடியும். ஆனால் மோடி பிரதமர் ஆன பிறகு அது கிடப்பில் போடப்பட்டு, அதற்குப் பதிலாக pm கேர்ஸ் நிதி (PM CARES Fund) என்று ஒரு புதிய நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் எவ்வளவு நிதி வந்தது எங்கே போனது என்பதைத் தகவல் உரிமைச் சட்டத்தில் யாரும் கேட்க முடியாது. இதைக் காட்டிலும் பெரிய ஊழல் என்னவாக இருக்க முடியும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய வியாபாரிகள் தேச உடைமையாக்கப்பட்டுள்ள வங்கிகளிலிருந்து கடன் பெறுகிறார்கள் அவர்கள் பெறுகிற கடனைத் திரும்பச் செலுத்துவதில்லை. வட்டியும் செலுத்துவதில்லை. அவை அனைத்தும் வாராக்கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
வைர வியாபாரி நீரவ் மோடி துபாயில் இருக்கிற வங்கியில் நூறு கோடி கடன் பெற்றார். அவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை அது சம்பந்தமாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிமன்றம் உடனடியாக 60 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டது. ஆனால் செலுத்தப்படவில்லை. இது போன்றவர்கள் தான் மோடியின் நண்பர்கள். எனவே மோடிக்கு ஊழல் பற்றிப் பேச அனுமதி இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!