சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்ட நிலையில், அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Transfer and posting Thiru N. Muruganandam, IAS - Notified.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/UJcjfelYYS
— TN DIPR (@TNDIPRNEWS) August 19, 2024
யார் இந்த முருகானந்தம்?: தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான முருகானந்தம் சென்னையைச் சோ்ந்தவா். பொறியியலில் மற்றும் எம்பிஏ கணிணி அறிவியல் பட்டதாரியான இவா் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்ச்சி பெற்று பணியில் சோ்ந்தாா்.
இவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான சுப்ரியா சாஹூ தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலராக உள்ளார். கடந்த 2001 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முருகானந்தம், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலாளர் பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்த இவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் நிதித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். நிதித் துறையில் அதிகம் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் அத்துறையில் சிறப்பாக செயல்பட்டார். தற்போது கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பில் முதல்வரின் தனி பிரிவுச் செயலா் பணியில் இருந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டார்.
எந்த பணி கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுபவர் என்ற நற்பெயரை பெற்றுள்ள முருகானந்தம் கரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்ற பெயரையும் பெற்றவர். தலைமைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட முருகானந்தம் ஐஏஎஸ், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
தமிழக அரசின் 50வது தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்!