கரூர்: கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவரது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானது என மேல கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இவ்வாறு அளித்த புகாரைப் பெற்ற சிபிசிஐடி போலீசார், கடந்த ஜூன் 18ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர், ஈரோடு சித்தார்த்தன், காஞ்சிபுரம் ரகு, கரூர் வழக்கறிஞர் மாரப்பன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட 13 பேர் தலைமறைவாக இருந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இதனிடையே, கேரளாவில் பதுங்கி இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன் ஆகியோர் கடந்த ஜூலை 16ஆம் தேதி தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதித்துறை எண் 1-ல் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில், கடந்த ஜூலை 30ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தினந்தோறும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார். அதன் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில், இன்று வரை தினம் தோறும் ஆஜராகி கையொப்பமிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், இன்று (செப் 2) திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கைது செய்யப்பட்டார்.
பின்னர், கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு மதியம் 2 மணி அளவில் அழைத்து வரப்பட்ட சேகரை, சுமார் 4 மணி நேர விசாரணைக்குப் பின் மாலை 6 மணியளவில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்நலம் குறித்து மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
அந்த சான்றிதழை பெற்ற பின் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சேகரை செப் 12ம் தேதி வரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து போலீசார் சேகரை கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “இந்த வழக்கை கரூரில் யார் செய்யச் சொன்னார்கள் என தெரியும்”.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு!