மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கட்டுமான பணிகள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.சு.வெங்கடேசன் கூறுகையில், "மத்திய அரசுக்கு கொடுத்து வந்த அழுத்தம் காரணமாக மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறு சீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்ட காலத்தில் முடிவடையும். தற்போது வரை 28% பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த பணிகள் நிறைவுக்கு பின்னர் மிக அழகிய ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் இருக்கும். நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வசதிகள் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த ரயில் நிலையத்தில் நான்கு மடங்கு விரிவாக்கம் கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் ஓய்வு அறை, 30 சதவீதம் குளிர்சாதன வசதி இல்லாத பயணிகள் ஓய்வு அறை, ஏற்கனவே இருந்த அளவை விட 8 மடங்கு பெரிய இரு சக்கர வாகன பாதுகாப்பு மையம், 34 மின் தூக்கிகள் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தில் இடம் பெற உள்ளன.
இதையும் படிங்க: சாட்சி அளிப்பவரின் சாதி, மத அடையாளம் தொடர்பான வழக்கு: தலைமை பதிவாளர் பதிலளிக்க உத்தரவு!
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கு நிகராக ரயில் நிலையத்தின் வசதிகளையும் மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதை மூலம் ரயில் நிலையத்தை அடைய பயணிகளுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பயணிகளை கையாள்கிற மதுரை ரயில் நிலையம் ஒரு லட்சம் பயணிகளை கையாள்கிற அளவு விரிவாக்கப்படுகிறது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 25, 2024
ரூ 347 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ரயில் நிலைய விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்தேன்.
பயணிகளின் வசதிக்கே அனைத்து வகையிலும் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற… pic.twitter.com/DfjULhEkZS
மேலும் கூடல் நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக உருவாக்க வேண்டும் எனவும் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு பல்வேறு வேண்டுதல்களை, பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதால்தான் மத்திய அரசு செயலில் இறங்குகிறது. மேலும் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஒரு சென்ட் கூட தனியாருக்கு கொடுக்க கூடாது” என்றார்.