தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை அடுத்து இன்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்திருந்தார். அப்போது விமான நிலைய வளாகத்தில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவை வேட்பாளர் விஜய் வசந்த், "2வது முறையாக கன்னியாகுமரி மக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
எதிர்க்கட்சிகள் என்ன விமர்சனம் வைத்தாலும், வாக்குறுதிகள் அளித்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'இந்தியா கூட்டணி' (India Alliance) 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம். குறிப்பாக கடந்த முறையைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
இதையும் படிங்க: "எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது" - சசிகாந்த் செந்தில் பேட்டி!
தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகரிக்கும் திட்டத்தில் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ஆனால் அதற்கான தக்க பதிலை மக்கள் வெகு விரைவில் அளிப்பார்கள். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கட்சியை விட்டு வெளியேறியது கட்சிக்கு எந்த பாதிப்பு இல்லை. அந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதற்கு மற்றொருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" எனக் கூறினார்.
மேலும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் இடையே நிலவும் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்களின் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும்" என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கோவில்பட்டியில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்த கேள்வி எழுப்பிய போது, "இருப்பது 9 தொகுதிகள் தான் அதிலும் புதிதாக 3 தொகுதிகள் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளது. சரியான வேட்பாளரை கட்சித் தலைமைதான் தேர்வு செய்யும்" எனக் கூறினார். மேலும், 27ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விஜயகாந்தின் மகன் எனக்கும் ஒரு மகன் தான்" - ராதிகா சரத்குமார் பேச்சு!