ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13ஆம் தேதி திருச்செங்கோடு, சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகில வாணி (25) மற்றும் அவரது மகள் இதழிகா (3) ஆகியோர் வந்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் தங்கியிருந்த விடுதியின் அறையிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளதால், உடனடியாக இதுகுறித்து விடுதியின் மேலாளர் பவானி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட கோகில வாணியையும், இறந்த நிலையிலிருந்த குழந்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் சசிதரன் இறந்து ஒரு வருடமான நிலையில், கோகில வாணி திருச்செங்கோட்டில் உள்ள தனது தாயார் யோசோதா வீட்டில் வசித்து வந்ததாகவும், அங்குள்ள எண்ணெய் மில்லில் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோகில வாணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் சண்டை போட்டுக் கோபித்துக் கொண்டு பவானி கூடுதுறை அருகே உள்ள தனியார் விடுதியில் 13ஆம் தேதி வந்து தங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கோகில வாணி குழந்தையைக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result