கோயம்புத்தூர்: குப்பை குப்பை குப்பை.. நாம் அன்றாட வாழ்வில் குப்பை என்ற வார்த்தையை நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால், குப்பையின் இடையில் நம்மால் வாழ முடியுமா? எவராலும் முடியாது. அப்படி இருக்கையில், கோவை அடுக்குமாடி குடியிருப்பில் தாய் மற்றும் மகள் குப்பையின் இடையில் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ருக்மணி என்பவரின் கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆனதாக தெரிகிறது. கணவர் இறந்ததிலிருந்து வீட்டை விட்டு வெளியே வராமலும், வீட்டை பராமரிக்காமலும் இருந்துள்ளனர்.
மேலும், கணவர் இறந்ததால் உறவினர்கள் யாரும் இவர்களை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனாலேயே இவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது. தங்களுக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் போட்டும், அவ்வப்போது சமைத்தும் சாப்பிட்டு வந்துள்ளனர். இவர்களின் அக்கம் பக்கத்தினர் இவர்களை பார்ப்பதே அரிதாக இருப்பதாக கூறுகின்றனர்.
இவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் போட்டு சாப்பிட்டு விட்டு அதில் வரும் உணவுப் பொட்டலங்கள், டப்பாக்கள் போன்றவற்றை வெளியே போடாமல் வீட்டிற்குள்ளே சேகரித்து வைத்துள்ளனர். நாளடைவில் இந்த சேகரிப்பு டன் கணக்காக மாறியுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பத்ததும், அக்கம் பக்கத்தினர் ஈர நெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரனை தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்த தகவலறிந்த மகேந்திரன், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குச் சென்று பார்க்க முயன்ற போது அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்கிறார். பல முயற்சிக்கு பின்பு தான் வீட்டிற்குள் சென்று மகேந்திரன் பார்க்கிறார். இந்த நிலையில், வீட்டிற்குள் சென்ற அனுபவத்தை மகேந்திரன் ஈடிவி பாரத் உடன் பகிந்துள்ளார்.
அதில், “வீட்டிற்குள் செல்லும் போதே நம்மால் நுகர முடியாத அளவிற்கு ஸ்மெல் அடித்தது. ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கி சாப்பிட்ட உணவுப் பொட்டலங்கள், டப்பாக்களை கொண்ட டிவி இடுக்குகள், அலமாரிகள், கட்டிலுக்கு அடியில் என ஆங்காங்கே மூடாமல் அதன் மீது புழுக்கள் நெளிந்தவாறு இருந்தன.
நம்மால் கொஞ்ச நேரம் கூட நிற்க முடியவில்லையே, இந்த வீட்டிலா இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்ற கேள்வி மனதிற்குள் எழுகின்றது. மேலும், சில டப்பாக்கள் மீது கரப்பான் பூச்சிகள், மூட்டைப் பூச்சிகள் என பூச்சி வகைகள் சுற்றிக் கொண்டு இருந்தன. இயற்கையான சுவாசம் இல்லாமல் எவ்வாறு இவ்வளவு நாள் வாழ்ந்தார்கள் என்பது தான் ஆச்சரியம்” என்கிறார் மகேந்திரன்.
இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தார் மகேந்திரன். இந்த தகவலறிந்து இன்று காலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு வீட்டிற்குள் இருந்து 4,000 கிலோ குப்பைகளை அகற்றி வீட்டை சுத்தம் செய்துள்ளனர். குப்பைகளை எடுக்கும் போது அதிலிருந்து வாயு வெளியேறுவதாகவும் தெரிவிக்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இதற்கிடையில், ஆன்லைனில் ஆர்டர் போடுவதற்கு பணம் எங்கிருந்து கிடைத்தது? என நம்மில் பலருக்கும் கேள்வி எழலாம். ஏனென்றால், ருக்மணியின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது கணவர் இறந்ததால், அவரின் ஓய்வூதியத்தை வைத்து உணவை மட்டும் ஆன்லைனில் ஆர்டர் போட்டு இருவரும் சாப்பிட்டு வந்ததாக கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: உலகின் முதல் பெண் வழக்கறிஞர் கண்ணகி.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு! - Madras High court madurai bench