திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள நீலிக்கொல்லை பள்ளிவாசலில் நிர்வாகக் குழு தேர்தல் வருகிற 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல், வேலூர் சரக வக்பு வாரிய கண்காணிப்பு அலுவலர் ஷபானா தலைமையில், இன்று (ஏப்.20) நீலிக்கொல்லை பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதில் போட்டியிடுவதற்காக பள்ளிவாசலில் உள்ள இரு தரப்பினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், வக்பு வாரிய அலுவலர்கள் ஒரு தரப்பினரின் வேட்புமனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றொரு தரப்பினர் வேட்புமனுவை ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளிவாசல் அருகே உள்ள வி.ஏ.கரீம் சாலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வக்பு வாரிய அதிகாரிகள் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில், வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நீலிக்கொல்லை பள்ளிவாசல் நிர்வாகக் குழு தேர்தலில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதாகக் கருதி, அதற்கு முன்னரே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கண்கலங்க வைக்கும் தருணம்.. நடுரோட்டில் உயிரிழந்து கிடந்த குட்டி யானைக் கண்ட தாய் யானையின் பாசப் போராட்டம்! - DEATH OF BABY ELEPHANT