சென்னை: சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பின்னர், உடனடியாக அவரது உடல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால், அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் பெரம்பூர் பகுதி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 8 பேர் தாமாக வந்து சரணடைந்தனர். இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, அவர்கள் செம்பியம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் கோகுல், விஜய் மற்றும் சேது ஆவர்.
இந்த நிலையில், உடற்கூறாய்வுக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சடங்குகள் முடிக்கப்பட்டு, குடும்பத்தார் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணை நாளை காலை 08.30 மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயனின் நீதிமன்ற அறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடல் BSP அலுவலகத்தில் அடக்கமா? நாளை விசாரணை!