ஈரோடு: ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் பகுதியில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் செவ்வாழை, கதலி, பூவன் உள்ளிட்ட உயர் ரக வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர். இந்த வாழை மரங்கள் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்துள்ளது.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கரட்டூர், குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம், நாதி பாளையம், வடுகபாளையம், நாகதேவன் பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, குள்ளம்பாளையம் செங்கோட்டை நகர் நாதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட செவ்வாழை, கதலி, பூவன் உள்ளிட்ட வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமாகி உள்ளது.
இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கணக்கிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்த போதிலும், வாழை சேதத்துக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், 12 மாதப் பயிரான ஒரு வாழைக்கு சுமார் 300 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அறுவடைக்கு பத்து நாட்களே இருக்கும் நிலையில், கனமழை காரணமாக வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முறிந்து விழுந்த வாழை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு மத்தியில் கொட்டித் தீர்த்த மழை.. நெல்லை மக்கள் மகிழ்ச்சி!