நீலகிரி: மலைகளின் இளவரசியான உதகை, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லாம்ஸ் ராக், டால்பின் ஹவுஸ், லாஸ் ஃபால்ஸ், இந்திய ராணுவ மையம், ராணுவ அருங்காட்சியகம், படகு இல்லம் போன்ற சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.
மேலும், 69 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட மணிக்கூண்டு ஒன்றும் குன்னூரின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. அப்போதைய கல்கத்தாவில் இருந்த ஸ்டீல் இண்ட் நிறுவனத்தின் மூலம் இந்த மணிக்கூண்டு 1955ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது, சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கடிகாரம்தான் இந்த மணிக்கூண்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாவி கொடுத்த பின்னர், இரும்பு பாரத்தில் தானியங்கியாக இயங்கும் இந்த பிரமாண்ட கடிகாரமானது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மணியோசை எழுப்பக் கூடியது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டை நகராட்சி மேலாளராக இருந்த காதர் பராமரித்து வந்தார். அவர் உயிரிழந்த பிறகு, மணிக்கூண்டானது பராமரிப்பின்றி நின்று போனதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2006ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த சந்திரன் மணிக்கூண்டை பராமரித்து இயங்க வைத்தார்.
இதுகுறித்து சந்திரன் கூறியபோது, "நான் பணியில் இருந்தபோதும், 2014ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றபோதும் இந்த மணிக்கூண்டை பராமரித்து வருகிறேன். இதற்காக எனது சொந்த பணத்தையேச் செலவிடுகிறேன். குன்னூர் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டபோது நிறுவப்பட்ட மணிக்கூண்டே அப்போதைய குன்னூரின் அடையாளம்.
இதனை காலத்தால் அழிந்து விடாமல் முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். மேலும், அடுத்த தலைமுறைக்கு இந்த மணிக்கூண்டை சிறந்த முறையில் பராமரித்து, அவர்களும் இதனை காண வழிவகை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் டேனியல் என்பவர் கூறுகையில், "மனிதர்கள் நின்று விடுவார்கள். கடிகாரம் நிற்காமல் ஓடுகிறது. ஆனால், இடை இடையே பழுதாகி நிற்கும் இந்த கடிகாரத்தை நகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் உள்ளது. இந்த கடிகாரத்தை தற்போது சந்திரன் என்பவர் தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார். ஆனால், அவருக்குப் பிறகு இந்த கடிகாரத்தை பராமரித்து இயக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தையும், நகராட்சி நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது?