திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலூகாவில் உள்ள கோனூர், சிந்தலகுண்டு, அனுமதராயன்கோட்டை, சாமியார் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வாழை வகைகளான செவ்வாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் பல லட்சம் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சூறாவளி காற்றால் சிந்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
இதில் 300 கற்பூரவல்லி, 200 செவ்வாழை மரங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தற்போது சூறாவளி காற்றால் சுமார் 5 லட்சத்திற்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதேபோல், அனுமதராயன் கோட்டையில் இன்பா என்பவரின் விவசாய நிலத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசும், தோட்டக்கலைத் துறையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வாழை மரங்களை நேரடியாக ஆய்வு செய்து, அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்; உடற்கூறாய்வு முடிவில் வெளிவந்த பகீர் தகவல்! - TIRUNELVELI JAYAKUMAR DEATH Case