நீலகிரி: அதிமுகவில் வாரிசுகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மற்ற கட்சியில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் என நீலகிரி அதிமுக வேட்பாளரும், அதிமுக முன்னாள் சபாநாயகரான தனபாலின் மகனுமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகரும் அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மத்திய இணை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினரின் மகன் என முக்கிய நபர்கள் போட்டியிடுவதால் நீலகிரி தொகுதி நட்சத்திர தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், அதிமுக, திமுக என மாறி மாறி நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜகவைச் சார்ந்த அமைச்சரை வெற்றி பெற வைக்க பாஜகவினர் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். அது போல் திமுக சார்பில் கடந்த முறை ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என திமுகவினரும் கடுமையான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால், அவரை வெற்றி பெற வைக்க அதிமுகவினரும் பல்வேறு வியூகங்கள் வகுத்து, தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஈ டிவி பாரத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “நீலகிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. திமுக, பாஜகவால் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே தற்போது தேர்தலைச் சந்திப்பதென்பது, எதிர் அணியினருக்குத் தான் கடினமாக இருக்கும்.
உதகை, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. நான் வெற்றி பெற்றவுடன் இந்த பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பது தான், எனது முதல் இலக்கு. புறவழிச்சாலை அமைக்கச் சட்டமன்ற உறுப்பினரான என்னுடைய அப்பா மூலம் முயற்சிகள் மேற்கொண்ட போது, மத்திய அரசு அதற்கு அனுமதி தரவில்லை. நான் வெற்றி பெற்றவுடன் போராடி அதற்கு அனுமதி வாங்குவேன்.
வாரிசு அரசியல் என்பது இல்லை, நான் கட்சியில் ஐடி விங்கில் பணியாற்றியுள்ளேன். அதிமுகவில் வாரிசுகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் மற்ற கட்சியில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும்”, என்றார்.