சென்னை: சென்னை குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் (50). இவர் சொந்தமாக லாரி வைத்து தோல் கழிவுகளை ஏற்றிச் செல்லும் தொழில் செய்து வந்த நிலையில், தாமஸ் அதே பகுதியைச் சேர்ந்த சபரி என்ற பிருத்திவி ராஜன் (31) என்பவருக்கு ரூ.30,000 கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பணத்தை திருப்பி கேட்டபோது தாமஸ்-க்கும் - சபரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அன்று இரவு சபரி பணம் தருவதாக தாமஸை அழைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தாமஸ் சபரி கூறிய இடத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, திருநீர்மலை கருமாரியம்மன் கோயில் அருகே சபரியும், அவருடன் இருந்தவர்களும் தாமஸை சரமாரியாக அரிவாளால் தலை பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதிகளவு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே தாமஸ் உயிரிழந்தார்.
பின்னர், தாமஸின் உடலைக் கைப்பற்றிய குரோம்பேட்டை போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சபரி என்ற பிரித்திவிராஜன் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாமஸிடம் 28,000 ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனை அவர் திருப்பிக் கேட்டபோது ஒரு வாரத்தில் கொடுத்து விடுகிறேன் என்று கூறினேன். அப்போது, அவர் உன்னால் பணம் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது எனக் கூறி எனது குடும்பத்தினர் குறித்து தவறாகப் பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்து ஏன் இப்படி பேசுகிறாய் என கேட்டதற்கு, அப்படித்தான் பேசுவேன், உன்னால் என்ன செய்ய முடியும் என என தாமஸ் கூறியதால் ஆத்திரத்தில் அருகில் இருந்த மெக்கானிக் கடையில் இருந்த இரும்பு பொருளை எடுத்து தாமஸை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.