திண்டுக்கல்: "நான் நினைத்திருந்தால் 50 ஆயிரமோ , ஒரு லட்சமோ வயநாடுமக்களுக்காக கொடுத்திருக்க முடியும், ஆனால் பொதுமக்களும் இதில் பங்களிக்க வேண்டும் என நான் நினைத்தேன்" என்கிறார் திண்டுக்கல்லில் உணவகம் நடத்தி வரும் முஜீப். நகர்ப்பகுதியில் உள்ள இவரது உணவகத்தில் நேற்றிரவு (07.08.2024) 8 மணிக்கு துவங்கி தடல் புடலான மொய் விருந்து நடைபெற்றது.
இனிப்புடன் தொடங்கிய இந்த விருந்தில், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, பரோட்டா, நெய் சோறு மற்றும் ஆனியன் ரைத்தா, பாயசம், என வரிசை கட்டின. வந்தவர்கள் போதும், போதும் என கூறும் அளவுக்கு உணவு வகைகள் கேட்டுக் கேட்டு பரிமாறப்பட்டன. வயிறார சாப்பிட்ட பின்னர் , இலைக்கு அடியில் தங்களால் முடிந்த நிதியை வைத்துவிட்டுச் சென்றனர்.
இந்த நிதி கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சென்று சேரும் என்கிறார் முஜீப். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்களின் கலாச்சாரத்தில் பண்டைய காலத்திலிருந்தே, மொய் விருந்து என்ற வழக்கம் இருந்து வருகிறது. வறுமையால் நொடிந்தவர்கள் இது போன்ற விருந்து நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். இதே போன்ற பாரம்பரிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என நாங்கள் நினைத்ததன் விளைவு தான் இந்த மொய் விருந்து" எனக் கூறினார்.
"நான் மட்டும் பணம் கொடுத்து உதவினால் போதாது. என்னைச் சுற்றியுள்ளவர்களும், நண்பர்களும், உறவுகளும் இதில் பங்களிக்க வேண்டும் என நான் விரும்பினேன். இதற்காக மொய் விருந்து நடத்திய போது, ஏராளமானவர்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார் முஜீப்.
இது குறித்து மொய் விருந்தில் கலந்து கொண்ட ராஜேஸ்வரி கூறுகையில், "வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த மொய் விருந்தை ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த மொய் விருந்தின் நோக்கமே வயிறார உணவு அருந்திவிட்டு, அவர்களால் முடிந்ததை இலைக்கு அடியில் வைத்துவிட்டுச் செல்வர்.இது பாராட்டப்படக் கூடிய ஒன்றாகும். எங்களால் முடிந்ததை நாங்கள் நிதியாகக் கொடுத்து உள்ளோம். இதனால் எங்களுடைய வயிறும் மனதும் நிறைவடைந்துள்ளது" என தெரிவித்தார்.
நேற்று இரவு 8 மணி 10 மணி வரை இந்த விருந்து நடைபெற்றது. மேலும் அங்கே வைக்கப்பட்டு இருந்த உண்டியலிலும் சிலர் பணம் செலுத்தினர். அப்போது சிறுவர் ஒருவர் தான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த சில்லறைக் காசுகளை நிவாரண நிதிக்காக வைக்கப்பட்டு இருந்த உண்டியலில் செலுத்தினார். இது அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. மேலும் ஒருவர் 10 ஆயிரம் ரூபாய்கான் காசோலையை வழங்கினார். இந்த மொய் விருந்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் அனைத்தும் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன மொய் விருந்து?: மொய் விருந்து என்பதை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ அல்லது பொது நல நோக்கிற்காகவோ ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து விருந்து நடத்தப்படும். இந்த விருந்தில் பங்கேற்பவர்கள் உணவை சாப்பிட்டு விட்டு இலைக்கு அடியில் தங்களால் இயன்ற தொகையை பணமாக வைப்பார்கள். இந்த தொகை பொதுவாகவே சாப்பாட்டு செலவுக்கானதை விட அதிகமாகத் தான் இருக்கும்.
தனிநபரோ, குடும்பமோ வறுமையில் சிக்கினால், அவரது நண்பர்கள் யாரும் தனியாக உதவ முடியாது. எனவே இது போன்ற விருந்து பொருளாதார சமநிலையும், மக்கள் ஒத்துழைப்புடன் கடன் வாங்காமல் கவுரவமான வாழ்க்கை வாழவும் தங்களுக்குள்ளாகவே செய்து கொண்ட ஏற்பாடாக கருதப்படுகிறது. தமிழில் விஜயகாந்த்தின் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான "சின்ன கவுண்டர்" திரைப்படத்தில் இது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அங்கிருந்து வரும் தகவல்கள் கவலையளிக்கும் விதமாகவே உள்ளன. மீளொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் கேரள மக்களுககு நாடு முழுவதும் உதவிக்கரங்கள் நீண்டு வருகின்றன.
கேரளா முதலமைச்சர் பிரனாயி விஜயன், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களால் இயன்ற நிதியினை 'முதலமைச்சர் நிவாரண நிதிக்கு' அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் முயன்ற நிதியை வழங்கி வருகின்றனர்.
In times of tragedy, holding hands is the purest form of solidarity, a promise that no one faces adversity alone. Every contribution, no matter the size, makes a difference.#StandWithWayanad pic.twitter.com/ABYwZfhUen
— Pinarayi Vijayan (@pinarayivijayan) July 31, 2024
தமிழ்நாட்டில், உண்டியல் மூலம் வசூல் செய்வது, ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது, பொதுமக்கள் கூடும் இடங்களில் நிதி திரட்டுவது, ஒரு நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை நிவாரண நிதிக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவரிசையில் முஜீப் மொய் விருந்து மூலம் நிதி திரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஒருநாள் வருமானத்தை வயநாட்டுக்கு கொடுக்கும் தேனி ஆட்டோ டிரைவர்கள்!