தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை நேற்று திறந்து வைத்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பிரதமர் மோடி, தங்களது நூறு சதவீத தோல்வியை உறுதியாக உணர்ந்த பின்பு, அதன் எதிரொலியாகத்தான், இதுவரை அதிமுகவை ஊழல் ஆட்சி என வர்ணித்தவர்கள், இன்று திடீரென எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்து பேசுகின்றனர்.
எப்படியாவது நோட்டாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று விட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு யுக்தியை பிரதமர் கையாள்கிறார். அதனால்தான் இந்த குழம்பிய பேச்சு. அவரது சாதனைகளை பட்டியலிட முடியாது, வேண்டுமானால் அவரால் ஏற்பட்ட வேதனைகளைத்தான் சொல்ல முடியும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 370, 270 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறுவதெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம். இவர்களால் டெல்லி தலைநகரில் கூட வெற்றி பெற முடியாது. கடந்த முறை 37 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று, பாஜக ஆட்சி அமைத்தது.
இந்த முறை எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் மோடியை எதிர்த்து நிற்பதால், இந்தியா கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது ஆரூடமோ, ஆலமரத்தடி ஜோசியரின் கணக்கோ அல்ல, அறிவுப்பூர்வமான கணக்கு, அரசியல் கணக்கு.
பிரதமர் பேசும்போது மேடையில் இருந்த தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெயரையும் குறிப்பிடாதது ஆத்திரம், அறிவை மறைக்கும் செயலாக உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய மூன்று துறைகளை திரிசூலம் போல வைத்துக் கொண்டு வெற்றி பெற முயற்சித்து வருகிறது" என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்காளர் அட்டைகள் ஒப்படைப்பு - சன்னாபுரம் கிராமத்தினர் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்ததன் காரணம் என்ன?