தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி. இவர், உடல் நலம் சரியில்லாத பாட்டியைப் பார்ப்பதற்காகக் கடந்த ஐந்தாம் தேதி போடிநாயக்கனூரில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்குச் சென்றார்.
அப்போது போடிநாயக்கனூர் பூக்கடை அருகில் உள்ள போடி நகரக் காவல் நிலையம் முன்பு நடந்துச் சென்ற போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், கண்மணி அருகில் வந்து அவர் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
தப்பி ஓடிய மர்ம நபர்களைக் கண்மணி பின் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்தபோதிலும் அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பித்து விட்டதால், அதிர்ச்சியடைந்த பெண் அருகில் உள்ள போடி நகரக் காவல் நிலையத்திற்குச் சென்று இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் கண்மணி கூறுகையில்,"சாலையில் நடந்துச் சென்றபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து எனது கையில் இருந்து செல்போன் மற்றும் பணம் இரண்டாயிரத்தை பறித்துச் சென்றுவிட்டனர்" என பதற்றத்துடன கூறினார்.
இந்த நிலையில், செல்போன் பறிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காவல் நிலையத்தின் முன்பே பெண்ணிடம் செல்போன் பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சில்லி சிக்கினுக்குப் பணம் தராததால் கொலை - அதிர வைக்கும் கொலையின் பின்னணி..