சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் இதுவரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்பவரை அழைத்துச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
6 செல்போன்கள்: இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள் அதிமுக முன்னாள் நிர்வாகியும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினருமான ஹரிதரனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, செம்பியம் தனிப்படை போலீசார் நேற்று ஹரிதரனை கைது செய்து செல்போன்களை எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் செல்போன்களை சேதப்படுத்தி வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
3 செல்போன்கள் மீட்பு: இதனையடுத்து, வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் தீயணைப்புத் துறையில் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களை வைத்து, நேற்று தேடுதல் பணியைத் தொடங்கினர். அப்போது மூன்று செல்போன்களை மீட்டனர். தொடர்ந்து நேற்று மீட்கப்பட்ட மூன்று செல்போன்களின் பாகங்களையும், சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மூன்று செல்போன்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களையும் அழைத்து வந்து மீதமுள்ள செல்போன்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், தடய அறிவியல் துறையினர் அந்த செல்போன்களில் இருந்து ஏதாவது தடயங்களை சேகரிக்க முடியுமா என சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள செல்போனின் ஐஎம்இஐ (IMEI number) எண்ணைக் கண்டுபிடித்து, அதில் எத்தனை சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கண்டுபிடித்தால் அந்த சிம்கார்டிற்கு எந்தெந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. இதிலிருந்து எந்த எண்ணிற்கு அழைப்பு சென்றுள்ளது என்பதைப் போன்ற விவரங்கள் எல்லாம் பெற முடியும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை: "திமுகவுக்கு எதிராக பேசுகிறேனா?" - இயக்குநர் பா.ரஞ்சித் விளக்கம்!