சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்-2024 கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெறுகிறது, தற்போது 3வது நாளான இன்று (பிப்.14), மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
இது குறித்த விவாதத்தில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசுவையில், “ஜனவரி மாதம் 13ஆம் தேதி 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவிடம் அளித்துள்ளோம்.
அதில் தேர்தல் செலவு குறைவது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், நாடு முழுவதும் ஏற்படும் பாதிப்புகள், நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டு, இறுதி அறிக்கையில், நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்போம். இல்லையெனில் அப்போது தங்களது முடிவை தெரியப்படுத்துவோம்.
2026ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த மற்றொரு தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது” என்றார். இது குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனி தீர்மானத்துக்கு அதிமுக சார்பில் ஆதரவை தெரிவிக்கிறோம் என கூறினார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டின் தலையில் தொங்கும் கத்தி"- தொகுதி மறுசீரமைப்பை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்