சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரைத் தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சட்டமன்றக் கூட்டத்தொடரில் பல்வேறு நல்ல அறிவிப்புகளையும், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பயன்படக்கூடிய, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அறிவிப்புகளை முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஓசூரில் விமான நிலையம் 2,000 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பு என்பது பல தலைமுறைகளாக எதிர்பார்த்த அறிவிப்பு. தமிழகத்திற்கு நடக்கின்ற நல்லதை ஏன் தமிழக பாஜக தலைவர் எதிர்க்கிறார் என்று புரியவில்லை. மொத்த தமிழகமும் ஓசூர் சர்வதேச விமான நிலையத்தை வரவேற்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
ஆனால், தமிழக பாஜக தலைவர் மட்டும் ஓசூரில் விமான நிலையம் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும், முதலமைச்சரின் அறிவிப்பை கொச்சைப்படுத்துகின்ற விதத்திலும் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தினுடைய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை எதிர்ப்பதை அவர் கைவிட வேண்டும். தமிழகத்தினுடைய வளர்ச்சியைப் பேசாமல், தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் - TN Assembly 2024