தருமபுரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 11) தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மூன்று மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஔவையின் வரலாற்றில் தருமபுரிக்கு எப்படி பங்கு இருக்கிறதோ அதேபோல, தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்திலும் தருமபுரிக்கும் முக்கிய பங்கு உண்டு. வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் 18 பேருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தான் விடியல் பிறந்துள்ளது. அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.1.18 கோடி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பும் வெளியிடப்படும்.
மாநில அரசுகளை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு: எல்லா மாவட்டங்களையும் சமமாக மதித்து மக்களுக்காகவே செயல்படுவதும் திராவிட மாடல் அரசு. ஆனால், ஒன்றிய பாஜக மாநிலங்களை சமமாக நினைப்பதில்லை. ஒன்றிய அரசு, எல்லா மாநில அரசுகளையும் மதிக்கணும்; அரவணைக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு அப்படி செயல்படவில்லை.
மாநில அரசுகளையே ஒன்றிய அரசு அழிக்க நினைக்கிறது. மாநிலங்களை அழிப்பதன் மூலம் நமது மொழியை, இனத்தை, பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முக்கியமான நிதி ஆதாரத்தை பறிக்கிறது. மாநிலத்திற்கான ஆக்ஸிஜன் போன்ற நிதியை நிறுத்தும் வேலையை ஒன்றிய அரசு பார்க்கிறது. மாநிலங்கள் ஒன்றிணைந்தால்தான், ஒன்றிய அரசு; இதை உணராமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
தேர்தலுக்காகவே சிலிண்டர் விலை குறைப்பு: தேர்தல் நெருங்கி வருகிறது, பிரதமர் மோடியும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். இதனை மக்களும் சுற்றுப்பயணமாக அல்ல, வெற்றுப்பயணமாகவே பார்க்கிறார்கள். இந்த பயணங்களால் ஏதேனும் வளர்ச்சி இருக்கா? 2019-ல் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு இப்போதுதான், பூஜை நடத்தினார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திவிடுவார்கள். தேர்தல் வருவதால், சிலிண்டர் விலையை குறைத்தது போல அறிவிக்கிறார், பிரதமர் மோடி. 10 ஆண்டுகளாக ரூ.500-க்கும் மேலாக உயர்த்திவிட்டு, இப்போது ரூ.100 மட்டும் குறைப்பது அப்பட்டமான மோசடி வேலை இல்லையா? என கேள்வியெழுப்பினார்.
தேர்தல் வருவதால், தமிழ்நாடு மீது மோடிக்கு திடீர் பாசம்: மேலும் பேசிய அவர், 'சென்னையிலும் தூத்துக்குடியிலும் வெள்ளம் வந்தபோது மக்களைப் பார்க்க வராத பிரதமர் மோடி, இப்போது மட்டும் அடிக்கடி தமிழ்நாடு வருவதற்கு என்ன காரணம்? என கேள்வியெழுப்பி மு.க.ஸ்டாலின், தேர்தல் நெருங்குவதே இதற்கு காரணம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி ஓட்டு கேட்டுதான் வருகிறார் என மக்களுக்கு தெரியும்.
தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கான நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன் என சொல்லிய பிரதமர் மோடி, இங்கு என்ன வளர்ச்சி நிதியை கொடுத்துள்ளார்? ஜிஎஸ்டி வரி இழப்பீடால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ரூ.20 ஆயிரம் கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமாக கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியை தரவில்லை. மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளுக்கு ஒப்புதலையும், அதற்கான பணத்தையும் ஒன்றிய அரசு தரவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
ஒன்றிய அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு மாநில அரசின் பணமா?: பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கும் முக்கால் பங்கு மாநில அரசின் பணமும், ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 50% மாநில அரசின் பங்கும் உள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, மாநில அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டுதான் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள் என்பதை பிரதமர் மோடிக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.
வெறும் கையால் முழம் போடும் பிரதமர் மோடி; மு.க.ஸ்டாலின் சாடல்: ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் எங்கிருந்து வருகிறது? மாநிலங்களின் வரியாக இருந்தாலும், ஒன்றிய வரியாக இருந்தாலும், அது மாநில மக்களின் வரி தான். வெறும் கையால் முழம்போடுவது என்று சொல்வதைப் போல, தமிழ்நாட்டிற்கு வந்து வெறும் கையால் பிரதமர் மோடி முழம் போட்டுக் கொண்டிருக்கிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது பாசம் பொங்கும். ஆனால், நாங்கள் மக்களோடு இருக்கோம், மக்களான நீங்கள் எங்களோடு இருக்கீங்க..! மக்களும் அரசும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என விமர்சிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் உள்ள மக்களின் நலனுக்காக நடக்கும் ஆட்சிதான், இது.
அதனால் தான், தங்களது குடும்ப விழாவிற்கு வருவதைப் போல, நீங்கள் எல்லாம் உரிமையோடு இங்கு வந்துள்ளீர்கள். இதே உணர்வோடு, வளமோடும், நலமோடும் தமிழ்நாட்டை வாழவைப்போம். இந்தியாவிற்கே வழிகாட்டியாக நாம் மாறுவோம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பிரதமர் மோடி இருக்கட்டும்..முதலில் என் மீது கை வையுங்கள் பார்க்கலாம்' - அண்ணாமலை காட்டம்