சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குருப் 1ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், கூட்டுறவுத்துறையில் 13 துணைப்பதிவாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குருப் 1 பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (25.06.2024) தலைமைச் செயலகத்தில், 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணிநியமன ஆணைகள் பெற்றுக் கொண்ட பயிற்சி அலுவலர்களுக்கு வரும் ஜுலை 1-ந் தேதி முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது. கூட்டுறவுத் துறையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மண்டல கூடுதல் பதிவாளர் , இணைப்பதிவாளர்கள் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு 300 துணைப்பதிவாளர் பணியிடங்கள் பணிநிலைத் திறனின்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களாகும்.
குருப் 1 பணியின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் பணிகளான சரகத் துணைப்பதிவாளர்கள், கூட்டுறவுத் துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களாகவும், வணிக நோக்கம் கொண்ட கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்களாகவும் பணிபுரிவார்கள். இவர்கள் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்தல், கூட்டுறவுச் சங்கங்களின் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் அதன் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்வர். இப்பணியிடங்களில் காலியாக இருந்த 13 துணைப்பதிவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டு இப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 13 பணியிடங்கள் கூட்டுறவுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், குருப் 1 தேர்வின் மூலம் தேர்வுச் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 துணைப்பதிவாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். பணிநியமன ஆணைகளை பெற்றவர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பணிநியமன ஆணைகளை பெற்றவர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறும்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி , செயாலாற்றி ஏழை, எளிய மற்றும் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. துணைப்பதிவாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம், பொது மக்களுக்கு விரைந்த சேவைகள் வழங்க ஏதுவாக அமையும் என்ற நோக்கத்துடன் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் அனைவரும் கூட்டுறவின் சிறப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் பெயரில் புதிய விருது.. சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!