கோயம்புத்தூர்: கோவை, காந்திபுரம் அனுப்பர்பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட இருக்கும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
அடிக்கல் நாட்டும் விழா: அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத்துறை செந்தில் பாலாஜி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, அந்தியூர் செல்வராஜ், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி மற்றும் துறை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கம்பேக் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி: இந்நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய பின்பு மேடையில் பேசிய முதலமைச்சர், “மாணவர்களைச் சந்திக்கின்ற பொழுது புது எனர்ஜி ஏற்படுகிறது. கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன். அங்கிருந்து வந்த பின்பு முதல் மாவட்டமாக கோவையில் ஆய்வுப் பணிகளை அமைச்சர்களை மேற்கொள்ளக் கூறினேன். அந்த வகையில், தற்போது கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் (come back) கொடுத்துள்ளார். தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு வந்துள்ளார்.
பெரியார் நூலகம்: கோவையில் நூலகத்தோடு சேர்ந்து அறிவியல் மையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல, கோவையில் பெரியார் பெயரில் இந்த நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: கண் பார்வையை இழந்த குழந்தைகள்.. பட்டாசு வெடிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன?
எல்காட் நிறுவனமும், வேலை வாய்ப்பும்: எல்காட் நிறுவனத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு ஐடி புதிய பூங்கா அமைக்கப்படும், இதனால் 31 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். செம்மொழி பூங்கா பணிகளை நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்படும். சென்னையின் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூல்கம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் ஆகியவை இந்த ஆட்சியில் மக்களுக்கு அமைத்து தரப்பட்டுள்ளது.
கோவை வளர்ச்சி திட்டங்கள்: உலக அளவில் முக்கிய தங்க நகை மையமாக விளங்கும் கோவையில் தொழில் தொழில் பூங்கா அமைக்கப்படும் அதில் ஆய்வகமும் அமையவுள்ளது 124 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கும் தொழில் வளாகத்தில் 2000 பேர் நேரடியாகவும் 1100 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். விமான நிலைய விரிவாக்கம், சூலூரில் தொழில் மையம் மற்றும் கோவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கு புறவழிச்சாலை, குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை வட மாநிலத்தோடு ஒப்பிடங்கள்: 50 ஆண்டுக்கு முன்பு வட மாநிலத்தையும், தமிழகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். இப்போதும் ஒப்பிட்டு பாருங்கள், தமிழகம் அனைத்து துறையிலும் முன்னிலை மாநிலமாக இருக்கிறது. வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றது என்றார் அண்ணா. ஆனால் இப்போது தெற்கை நாங்கள் வளர்த்து இருக்கின்றோம், தெற்கு வடக்கிற்கு இப்போது வாரி வழங்குகிறது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்