திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) இந்தியா கூட்டணியின் சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவள்ளூர் மற்றும் வடசென்னை தொகுதிகளின் போட்டியிடும் "இந்தியா" கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, முதலமைச்சர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "வாக்குக்காக மலிவான அரசியல் செய்யும் மனிதரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை. அதனால் தான் பாஜக இந்த நாட்டுக்கு வில்லன். நாட்டில் இருக்கும் எந்தப் பிரச்னையையும் தீர்க்காமல், சுய விளம்பரத்திற்கு மட்டும் தான் பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார்.
நாம் ஒரு பக்கம் சாமானிய, ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்காகப் பார்த்துப் பார்த்து பல திட்டங்களை ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியிலிருந்து நிறைவேற்றிக் கொண்டு இருந்தால், இன்னொரு பக்கம் அவர்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் திட்டங்களையும், சட்டங்களையும் பாஜக அரசு அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள்.
மாநில முதலமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி-யைக் கடுமையாக எதிர்த்தவர் தான் மோடி. 'இதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. என் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த முடியும்' என்று கர்ஜித்தார். ஆனால், பிரதமர் ஆனதும் என்ன சொல்கிறார்? ஜி.எஸ்.டி வரி என்பது பொருளாதாரச் சுதந்திரம் என்று சொல்கிறார்.
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கின்ற மொத்த வருவாயில், 64 சதவிகிதம் அடித்தட்டு மக்களிடம் இருந்தும், 33 சதவிகிதம் நடுத்தர மக்களிடம் இருந்தும் வசூல் செய்யப்படுகிறது. வெறும் 3 சதவிகிதம் தான், பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. பிரதமர் மோடி சொன்னது போன்று G.S.T யாருக்குப் பொருளாதார சுதந்திரமாக இருக்கிறது என்றால், அவருடைய நண்பர்களான கார்ப்பரேட்களுக்கு மட்டும்தான்.
இப்படி நாம் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துகொண்டு இருந்தால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டினுடைய எல்லா உரிமைகளையும் மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார். அதனால் தான், அதிமுக அடிமை ஆட்சி என்று அவருடைய ஆட்சியை விமர்சித்தோம்.
சிறுபான்மையினருக்கு எதிரான CAA சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டது அதிமுக. நாடாளுமன்றத்தில் ஓட்டு போட்டது மட்டுமில்லாமல், 'இந்தச் சட்டத்தால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள்? என்று, சட்டமன்றத்திலேயே ஆணவமாகக் கேட்டவர் தான் பழனிசாமி. அதுமட்டுமில்லாமல், இதே வடசென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நான் உள்பட, ப.சிதம்பரம், பாலகிருஷ்ணன், திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, உதயநிதி என்று 8 ஆயிரம் பேர் மேல் F.I.R போட்டது தான் பழனிசாமி ஆட்சி.
பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல், அனைவர் மீதும் தடியடி நடத்தி ரசித்தார். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து, உழவர்களுக்கு துரோகம் செய்தார். பாஜகவுக்கு விசுவாசத்தை காட்டும் வேகத்தில், இன்னும் ஒருபடி மேலே சென்று, 'இந்த சட்டம் வந்தால் நம் விவசாயிகள் உத்தரபிரதேசம் சென்று வியாபாரம் செய்யலாம். இதை எதிர்ப்பவர்கள் விவசாயிகள் இல்லை, புரோக்கர்கள்' எனக் கூறி, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.
அதுமட்டுமன்றி, திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று, தமிழ்நாடு பெரிதும் மதித்துப் போற்றும் ஆளுமைகள் மேல் பாஜக காவிச்சாயம் பூசியதைக் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்தார். இவ்வளவு ஏன்? தன்னுடைய சொந்தக்கட்சித் தலைவரான எம்.ஜி.ஆர் மீது பாஜக காவிச்சாயம் பூசியதையே கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான், பழனிசாமி. அவர், இந்தத் தேர்தலில் பாஜகவின் உத்தரவுப்படி, பி-டீமாக நிற்கிறார்.
ஆகையால், இந்தத் தேர்தலில் INDIA கூட்டணியை வெற்றி பெற வைக்க இந்தியா முழுவதும் எல்லா மாநில மக்களும் தயாராகிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் சுற்றுப்பயணம் போய்விட்டு சென்னை வந்திருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் தருகிற ஆதரவு பிரமிக்க வைக்கிறது. நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம் எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பாஜகவின் தேர்தல் அறிக்கை சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது" - ஜவாஹிருல்லா விமர்சனம்! - Jawahirullah Criticized Bjp