சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா இன்று (ஜூலை 14) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அன்னியூர் சிவா, முதலமைச்சரைச் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து இனிப்புகள் வழங்கி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்ட அன்னியூர் சிவா, இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி, அன்னியூர் சிவாவிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளும் சேர்ந்து பெற்றுக் கொடுத்த வெற்றி.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. கருணாநிதி நூற்றாண்டில் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி இது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு! - Rowdy Tiruvengadam Encounter