லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party) வெற்றி பெற்று 14 அண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள 650 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி 412 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மேலும், அந்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் (Conservative Party) கட்சி 119 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், மூன்றாவது இடத்தில் அந்நாட்டின் லிபரல் டெமோகிராட் (Liberal Democrat) கட்சி 71 தொகுதிகளை வென்றுள்ளது. குறிப்பாக, தொழிலாளர் கட்சி கட்சி கடந்த தேர்தலைவிட 211 தொகுதிகள் கூடுதலாக வென்றுள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி 250 தொகுதிகள் குறைவாக வென்றுள்ளது.
இதனிடையே, உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் என மொத்தம் 8 தமிழ் வம்சாவளியைக் கொண்ட வேட்பாளர்களாக இத்தேர்தலில் போட்டியிட்டனர். அதில், உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் பவ் (Stratford and Bow) தொகுதியில் போட்டியிட்டார்.
மொத்தம் 19 ஆயிரத்து 145 வாக்குகள் பெற்று இவர் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மேலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3 ஆயிரத்து 144 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பெற்றுள்ளார். ஈழத் தமிழர் வம்சாவளியைக் கொண்ட உமா குமரன், இங்கிலாந்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hearty congratulations to @Uma_Kumaran on becoming the first-ever Member of Parliament for Stratford and Bow and the first-ever Tamil woman to become a member of the UK Parliament.
— M.K.Stalin (@mkstalin) July 5, 2024
You bring great pride to the Tamil community. https://t.co/sUuM2PFr7g
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரனுக்கு தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், இங்கிலாந்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகும் உமா குமரனுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடைய வெற்றி தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளது" என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி; பிரிட்டன் பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்!