தருமபுரி: தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இன்று (மார்ச் 29) இந்தியா கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு உரையாற்றினார்.
இந்த நிலையில், பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்கு கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. இது, மூத்த தலைவரான மருத்துவர் ராமதாஸுக்கு தெரியாதா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "பா.ஜ.க. என்பது சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி. சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி. நம்முடைய நாட்டை மத – இன – சாதி - மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. அப்படிப்பட்ட, பா.ஜ.கவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு.
ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் - சமூகநீதி பேசும் ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை இரகசியமெல்லாம் கிடையாது.
இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏன் மனதில்லாமல் அங்கு சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல - அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும். இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை.
பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. இது, மூத்த தலைவரான மருத்துவர் ஐயாவுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்.
ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன்… மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பா.ஜ.க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சியையே பா.ஜ.க. கவிழ்த்ததே.
இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக 'குளோஸ்' செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பா.ஜ.க. செய்திருக்கிறது, அதை மறந்துவிட்டாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "கரை வேட்டி கட்டியவரே இப்படி பண்ணலாமா?" திமுக தொண்டரிடம் ஆதங்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் - Thanga Tamilselvan Campaign