ஈரோடு: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக உள்பட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று இரவு சேலத்தில் இருந்து ஈரோடு வந்த மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விடுதியில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, இன்று (மார்ச் 31) காலை சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது, சம்பத் நகர் உழவர் சந்தை பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்து வந்த விஜயா என்ற பெண், தனது கணவர் மாநகராட்சியில் அரசுப் பணியில் உள்ளதால் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுகிறது என ஸ்டாலினிடம் கேள்விகளை எழுப்பினார். அதற்கு, மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்பட்டதற்கு காரணம் உள்ளது, காரணம் இல்லாமல் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படாது என பதிலளித்தார்.
அதற்கு கணவர் அரசு ஊழியர் என்றால், அவர் சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடுமா என கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனை தொடர்ந்து முக ஸ்டாலின் நீங்கள் பேசுவதும், கேட்பதும் தவறு என கூறி அந்த இடத்தை விட்டு நடத்து சென்றார்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கணவர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றுவதால். தனக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்பட்டதாக கூறும் விஜயா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பின் போது கோரிக்கை வைத்ததால், தனக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி கடந்த 28ஆம் தேதி மறைந்ததை தொடர்ந்து, ஈரோடு வந்த மு.க.ஸ்டாலின் அவல்பூந்துறையை அடுத்துள்ள குமாரவலசு பகுதியில் உள்ள கணேச மூர்த்தியின் இல்லத்திற்குச் சென்று, கணேச மூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை சோலார் அடுத்துள்ள சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.