சென்னை: சர்வதேச - தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் பதக்கங்களை வென்ற 589 தமிழ்நாட்டு வீரர்கள், வீராங்கனையருக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "நம்முடைய தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா மாநிலத்துக்கு அடுத்து அதிக வீராங்கனை அனுப்பி உள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 16 பேர் பங்கேற்றுள்ளனர். விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும், நீங்கள் முனைப்போடு வெல்ல வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் இங்கு உள்ளவர்களின் பெயர் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை எனக்கும், உங்களுக்கும் உள்ளது.
சர்வதேச - தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் பதக்கங்களை வென்ற 589 தமிழ்நாட்டு வீரர்கள் - வீராங்கனையருக்கு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய அறிவுறுத்தலின்பேரில், சுமார்… pic.twitter.com/XykkYkESsW
— Udhay (@Udhaystalin) July 30, 2024
பல்வேறு சமூக தடைகளைத் தாண்டி பெண் வீராங்கனைகள் இங்கு வந்துள்ளீர்கள். சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. பல்வேறு சாதனைகளை படைத்து பெருமை தேடி தருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கேலோ போட்டியில் தமிழ்நாடு முதன்முறையாக இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. அரசுப் பணியில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உங்களைப் போன்ற வீரர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கைகளை வைத்து வருகின்றார்கள்.
திமுக அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையின் காரணத்தால், முதற்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்க இருக்கிறோம் என்று சட்டசபையில் நான் பதிவு செய்துள்ளேன். முதல் கட்டமாக மிக விரைவில் 50 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார் என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களுடைய கோரிக்கைகளை, தேவைகளை அரசுக்கு தெரியப்படுத்துங்கள். அவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசும், நம்முடைய துறையும் எப்போதும் தயாராக இருக்கிறது. வருங்காலத்தில் தமிழ்நாட்டை இந்திய விளையாட்டுத் துறையின் தலைநகராக மாற்றுவோம்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கடந்த முறை மழை வெள்ளத்தால் கைவிடப்பட்ட பார்முலா 4 கார் பந்தயம் இம்முறை நடத்தப்படுகிறது. இந்த முறை அரசிற்கு எந்த செலவும் இல்லை. ஸ்பான்சர் அதிகளவில் முன்வந்துள்ளதால் அரசிற்கு செலவு இல்லை. ஸ்பான்சர்ஸை எப்படி வற்புறுத்த முடியும்? நாங்கள் எந்த ஸ்பான்சர்ஸை வற்புறுத்தினோம் என ஒருத்தரின் பெயரையாவது எதிர்க்கட்சித் தலைவரால் சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருச்சியில் மோகம் கொண்டுள்ளதா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்? சமூக ஆர்வலர் கூறுவது என்ன? - Instagram Reels controversy issue