கோயம்புத்தூர்: கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உள்ள 12,600 ஊராட்சிகளுக்கு 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் சிறப்பாக பயிற்சி செய்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும். தமிழகத்தில் அதிகமாக விளையாட்டுத்துறை சார்ந்து முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் 98 பதக்கங்களை தமிழ்நாடு பெற்று, இரண்டாம் இடம் பிடித்தது. அடுத்த முறை முதலிடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விளையாட்டுத் துறைக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது" என்று கூறினார்.
தொடர்ச்சியாக பேசிய அவர், "பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44 ஆயிரம் கோடியும், விளையாட்டுத் துறைக்கு 440 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகனின் துறைக்கு தந்தை குறைவாகத்தான் நிதி ஒதுக்கியுள்ளார். தந்தை தரவில்லை. நண்பர் நீங்கள் தரலாம். நான் உங்களிடம் நிதி கேட்கவில்லை, விளையாட்டு வகுப்புகளை வாங்கி கணிதம், அறிவியல் பாடம் எடுக்காமல் ஆசிரியர்கள் மாணவர்களை விளையாடவிட வேண்டும்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், "விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெறும் வீரர்களுக்கு, 6 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியம், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். கருணாநிதி ஒரு ஆர்வம் மிக்க விளையாட்டு வீரர். அவர் எனர்ஜியுடன் வேறு ஒருவரின் எனர்ஜியை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவரது எனர்ஜியும், உழைப்பும் விளையாட்டு வீரர்களுக்கு வர வேண்டும்.
நல்ல டீம் அமைந்தாலே, பாதி வெற்றி பெற்று விட்டதாக அர்த்தம். அதனால்தான் எப்போதும் வீழ்த்த முடியாத விளையாட்டு வீரராக கருணாநிதி இருந்தார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்ய வேண்டியது நமது பொறுப்பு. விளையாட்டு மட்டுமின்றி, நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றி பெற உழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், தேர்தலுக்குப் பிறகு திமுக காணாமல் போகும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அப்படிச் சொன்னவர்கள்தான் காணாமல் போய் உள்ளார்கள்" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: பாஜக ஆபிஸில் தோட்ட வேலைக்குகூட ஓபிஎஸ் செல்வார்.. விந்தியா கடும் சாடல்!