சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கோபாலபுரத்தில் உள்ள ஒரு முடி திருத்தகத்தில் இன்றைய திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்ட 'கோபாலபுரம் இளைஞர் திமுக' தான் கடந்த 1980ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி என்னும் அதிகாரப்பூர்வ அணியாக மாறியது.
கழக இளைஞர் அணி 44 ஆண்டுகளை நிறைவுசெய்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நீண்ட வரலாற்றில், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில், இளைஞர் அணிச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். @dmk_youthwing செயற்பாடுகளில் உற்சாகத்துடன் தங்களை… pic.twitter.com/JwexMaklPH
— Udhay (@Udhaystalin) July 19, 2024
கடந்த 1982ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின், தன் இடைவிடா உழைப்பின் மூலம் திமுக இளைஞர் அணியை வலிமை வாய்ந்த ஆற்றல்மிக்க அணியாக உருவாக்கினார்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதன் மூலம் நிதி திரட்டி திமுக தலைமையிடம் ஒப்படைத்து இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தை அணியின் வசமாக்கினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அன்றைய ஆளும் அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை உறுதியுடன் எதிர்ப்பதாக இருந்தாலும், திராவிட இயக்க கொள்கைகளைப் பரப்புவதாக இருந்தாலும், இன்றைய திமுக தலைவர் தலைமையில் இளைஞர் அணி தொடர்ந்து முன்னணியில் நின்றது.
திமுக தலைவரின் வழிகாட்டுதலில், இளைஞர் அணியில் பயிற்சி பெற்ற பலர் தலைமை நிர்வாகிகளாக, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் செயலாளர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஏற்றம் பெற்றனர்.
30 ஆண்டுகள் இளைஞர் அணியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்த திமுக தலைவர், திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் பொறுப்பேற்று சீரிய முறையில் பணியாற்றினார்.
இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, திமுகவினரின் வேண்டுகோளின்படியும் தலைமை முடிவின் படியும், அதே ஆண்டு ஜூலை 4 அன்று மாநில இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்றேன். இது, இன்றைய திமுக தலைவர் வகித்த பொறுப்பு என்பதை மனதிலேந்தி பணியாற்றத் தொடங்கினேன்.
25 லட்சம் புதிய இளைஞர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்த்தோம். இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி பாசறைக் கூட்டங்களை நடத்தினோம். அன்று, நாம் எதிர்க்கட்சி என்ற போதிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கைவிடப்பட்ட நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டோம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் முதல், நீட் தேர்வை ஒழிக்க கையெழுத்து இயக்கம் வரையிலான போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இணையத்தில் திமுகவின் மீது சுமத்தப்படும் அவதூறுகளை முறியடிக்க, சமூக வலைத்தள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தோம்.
இதற்கிடையில் கரோனா பெருந்தொற்று என்னும் உலகளாவிய நெருக்கடி. ஆனாலும், கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்கள் துயர் துடைத்தோம். தொகுதிதோறும் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம், வாசிப்பை விரிவுபடுத்த சட்டமன்றத் தொகுதிதோறும் ’கலைஞர் நூலகம்’, ’முரசொலி பாசறை பக்கம்’, ’முத்தமிழறிஞர் பதிப்பகம்’ என்று ஏராளமான பணிகளை முன்னெடுத்திருக்கிறோம்.
குறிப்பாக, கடந்த 2007ஆம் ஆண்டில் இன்றைய திமுக தலைவரால் திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டின் தொடர்ச்சியாக, 2024-இல் சேலத்தில் இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்தி காட்டினோம். திமுக தலைவரின் வழிகாட்டுதலும், இளைஞர் அணியினரின் உற்சாகமும் ஒத்துழைப்புமே இவற்றை சாதித்து காட்டின.
கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, ஒன்றியம் – நகரம் – பகுதி – பேரூர் வாரியாக திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறோம். இப்படி திமுக இளைஞர் அணி ஆற்றிய பணிகள் ஏராளம் என்றாலும், காத்திருக்கும் பணிகளும் ஏராளம்.
மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. ஆனால், கல்வி, தொழில் வளர்ச்சி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சியை சீர்குலைக்க வேண்டும். மக்களைப் பிளவுபடுத்தி, மதவாத, சாதியவாத வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று ஒருபுறம் பாசிச சக்திகள் காத்திருக்கிறார்கள்.
இன்னொரு புறம், திமுக எதிர்ப்பை மட்டுமே முதன்மை இலக்காகக் கொண்டு திமுக மீதும், திமுக முன்னோடிகள் மீதும் திராவிட மாடல் ஆட்சியின் மீதும், அவதூறுகளையும், பொய் செய்திகளையும் பரப்புவதன் மூலம் திமுகவை வீழ்த்த முடியும் என்று நினைக்கும் கயவர்களும் காத்திருக்கிறார்கள்.
நமக்கோ 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது. தொடர் வெற்றிகளை குவித்து வரும் திமுக தலைவர் தலைமையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழர்கள் வளம் பெற்று தமிழ்நாடு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும்.
இத்தகைய மாபெரும் கடமையை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு திமுக இளைஞர் அணிக்கு இருக்கிறது. சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை மீண்டும் 2026ல் அமைக்க இளைஞர் அணியின் 45ஆம் ஆண்டு விழாவில் உறுதியேற்போம்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு வழக்கு.. ஐகோர்ட் மதுரைக்கிளை முக்கிய உத்தரவு! - Manjolai issue