சென்னை: 2024 - 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. அதில் தற்போது துறைகள் சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னையின் வளர்ச்சியில் வடசென்னை மக்களின் பங்கு முக்கியமானது. அதன் சமூக பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு, வட சென்னையின் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை போக்கிட ரூபாய் 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு துறைகளின் மூலம் நடைபெறும் இப்பணிகளை நம்முடைய சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை ஒருங்கிணைத்து வருகிறது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான பணிகள் சிலவற்றை மட்டும் இந்த மாமன்றத்தின் வாயிலாக குறிப்பிட விரும்புகிறேன்.
மின்சாரத்துறை சார்பாக ரூபாய் 628 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை மின் பாதைகளை புதைவடங்கள் (Underground EB Line) ஆக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும், ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் 416 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 600 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் தளங்கள் கட்டப்படவுள்ளன. இப்படி பல்வேறு முக்கியத் திட்டங்கள் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலமாக செயல்படுத்தப்படவுள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு பட்டா பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன.
எனவே, பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை போக்கிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம். இதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு, பட்டா இல்லாத பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருக்கின்றோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காரைக்குடி டூ சென்னைக்கு ஏசி ஸ்லீப்பர் பஸ் கேட்ட உறுப்பினர்.. அமைச்சரின் பதிலால் அவையில் சிரிப்பலை!