தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசும்போது, "மன்னார் குடி தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும். 6 பள்ளிகள் தரம் உயர்த்தி வழங்க வேண்டி உள்ளது அதை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கூட்டணி மகத்தான கொள்கை கூட்டணி, தமிழக முதலமைச்சர் தொடர்ந்து எட்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 9வது முறை விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 10வது வெற்றியாக 2026ல் மகத்தான வெற்றியைப் பெறுவோம்.
221 தொகுதிகளில் முன்னிலையில் முதல் இடத்தை எடுத்திருக்கிறோம். அடுத்து வரும் தேர்தலில் அதிமுக இருக்கும் இடத்தையும் பெற்று 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்த கொள்கை கூட்டணி நிச்சயமாக தொடர வேண்டும்.
முதல் கூட்டத் தொடரிலேயே டெல்டாவிற்கான சிப்காட் தொழிற்சாலையை தஞ்சையில் கொண்டு வந்துள்ளதால், நமது மக்களுக்கு மகத்தான வேலை வாய்ப்பு உறுதி. விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டையும் இந்தப் பகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்போம். மேலும், மன்னார் குடி - பட்டுக்கோட்டை ரயில் பாதையைக் கொண்டு வர வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, "இந்தத் தேர்தல் வெற்றி என்பது சிரிக்கிற பெரியோர்கள் சிந்தித்தார்கள். சிறிய இளையவர்கள் நாங்கள் செய்து முடித்திருக்கிறோம். இன்னும் ஆறு மாத காலத்திற்கு வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று நன்றி தெரிவிப்போம். மக்களுக்கான நன்றிக் கடனாக இருக்கும். இது 2026 தேர்தலில் மிகவும் உறுதுணையாக இருக்கும்" என்று பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்பி பழனிமாணிக்கம், தஞ்சாவூர் எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பெண் போலீசுக்கு அரிவாள் வெட்டு.. காஞ்சிபுரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! - lady police assault