சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்கி, அரசுப் பணிமனைகளைக் கணினி மயமாக்கும் செயல்பாட்டை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (டிசம்பர் 11) தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உயிரிழந்த 7 பேரின் வாரிசுகளுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்களின் பராமரிப்பு பணிகளான எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளையும் இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டும்
பைக் டாக்சி இயக்குவது குறித்து தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்க முடியாது. ஒன்றிய அரசுடன் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். ஒன்றிய அரசு இருசக்கர வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே, அது இந்தியா முழுவதற்கும் பொருந்தும். ஆனாலும், நீதிமன்றங்களில் பைக் டாக்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவித கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் அலுவலர்களைக் கொண்டு குழு அமைத்து, பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி நடைமுறை இந்தியா முழுவதும் வந்துள்ளது. கடந்த ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டில் பைக் டாக்சி பயன்பாட்டில் உள்ளது.
பைக் டாக்சி இயக்குபவர், சொந்த பயன்பாட்டுக்காக வாங்கிய வாகனத்தை (வாடகை அல்லாத வாகனங்களை) வாடகைக்காக இயக்குகிறார். ஆனால், ஒருவருக்குப் பயணம் செய்பவர் வாடகைக்குப் பணம் கொடுக்கிறார் இது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்படாது.
பைக் டாக்சியை எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
இதனால், ஓட்டுநருக்கோ பயணிப்பவருக்கோ சிறு விபத்து ஏற்பட்டாலும் நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பைக் டாக்சிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்து வருகிறோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பைக் டாக்சியை எதிர்க்கின்றனர். இதற்கு எதிராக நேற்று (டிசம்பர் 10) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
பைக் டாக்சி வாயிலாக லட்சக்கணக்கானோர் வேலை பெறுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் அதை தங்கள் தொழிலுக்கு ஆபத்தாக உணர்கின்றனர். மத்திய அரசின் நடைமுறையையும் நீதிமன்ற உத்தரவையும் பின்பற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.
இதையும் படிங்க: "அதிமுக எம்பிக்கள் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை"- சு.வெங்கடேசன்
எனவே ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இதில், பைக் டாக்சியில் பயணிப்போர் விபத்தில் சிக்கினால் காப்பீடு பெறுவதில் வித்தியாசம் ஏற்படும். ஒன்றிய அரசு அது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
அபராதம் விதிக்கப்படும்:
தற்போது பைக் டாக்சி ஓட்டுநர்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்யும் அளவிற்குத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அபராதம் மட்டுமே விதிக்கிறோம்.
அனைத்து துறையிலும் காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் நடக்கின்றன. எனவே, அதற்கேற்ப விதிகளை மாற்றும் தேவை இருக்கிறது. பொதுமக்களைப் பாதிக்கக் கூடாது என்பதால் போக்குவரத்துத்துறை பேருந்துக் கட்டணம் உயர்வு போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளோம்.
போக்குவரத்துத்துறை ஒரு சேவைத்துறை:
தமிழ்நாட்டில் பேருந்துப் பயணக் கட்டணமாக ஒரு கிலோமீட்டர்க்கு 52 காசுகள் தான் வசூலிக்கப்படுகிறது. அதுவே, அருகில் உள்ள மாநிலங்களில் ஒரு கிலோமீட்டர்க்கு ஒரு ரூபாய் 10 காசுகள் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை ஒரு சேவைத்துறை; எனவே இழப்பு வருவது வழக்கமாக உள்ளது. ஆனால், அரசு அதை ஈடுசெய்து வருகிறது.
மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டமான விடியல் பயணத் திட்டத்திற்கான தொகை போக்குவரத்துத்துறைக்குத் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. எனவே, போக்குவரத்துத்துறை சிரமமின்றி செயல்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஒன்றாம் தேதியே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதற்குக் காரணம் விடியல் பயணத் தொகையைத் தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு வழங்குவதே காரணம். பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததே போக்குவரத்துத்துறை இழப்புக்கு முக்கியக் காரணம்," என்று கூறினார்.