ஈரோடு: ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் புதிய பேருந்துகள் இயக்க விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு நாகர்கோவில், மைசூர், கோவை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும், வருவாய்த் துறை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட ஜீப்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "அதிமுக ஆட்சியில் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதில் காலதாமதம் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி வந்தவுடன் தொழிலாளர்கள் மனம் மகிழும் வகையில் 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சங்கங்கள் தங்கள் இருப்பை காட்டுவதற்காக இந்த பிரச்னையை எழுப்பி வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பலருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டன.
இப்போது ஓய்வு பெற்றவர்கள் எத்தனை பேருக்கு, எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 685 பேருக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பணி ஆணை வழங்கப்பட்டது. விரைவில் மற்ற பணியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிரந்தரப் பணியாளர் நியமிக்க எழுத்துத் தேர்வு மற்றும் சோதனை ஓட்டம் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த கால தாமதத்தை தவிர்க்க அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கிறோம். அப்பணியாளர்கள் நியமித்ததால் தான் தீபாவளி, பொங்கல் நேரத்தில் எந்த வித இடையூறின்றி பேருந்துகள் இயக்க முடிந்தது.
நிரந்தரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவுட்சோர்சிங் செய்யும் முறை ரத்து செய்யப்படும். சிஎன்ஜி வாயு மூலம் எட்டு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 500 மின்சாரப் பேருந்துகள் வாங்க முடிவெடுக்கப்பட்டு, 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மினி பேருந்து குறித்து சட்டமன்றத்தில் கொள்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22ஆம் தேதி உள்துறை செயலாளர் இது குறித்த கருத்து ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.
அப்போது மக்கள் கருத்தறிந்து எந்தெந்த பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பேருந்துகள் சில இடங்கள் வேகமாக இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் பகுதியில் பேருந்து அதிவேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து இணை ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கரோனா காலக்கட்டத்தில் நகர பேருந்துகள் டிரைவர் மற்றும் கண்டக்டர் இல்லாததால் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன" என்றார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! - Bhavanisagar Dam