பெரம்பலூர்: குன்னம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், புதிய கிளை மற்றும் பணிமனையை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (வியாழக்கிழமை) துவக்கி வைத்து, முதன்முறையாக பெண் ஒருவருக்கு நடத்துநருக்கான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரி ரெட்டி மற்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், குன்னம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின், 40 வாரிசுகளுக்கு பணி ஆணை மற்றும் 25 ஆண்டு மற்றும் 10 ஆண்டு காலம் விபத்தின்றி பாதுகாப்பாக பேருந்து இயக்கி, போக்குவரத்து கழகத்திற்கு நற்பெயர் ஏற்படுத்திய 29 ஓட்டுநர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இதில், அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தில், முதன் முறையாக காரைக்குடி மண்டலத்தில் நடத்துனராக ரம்யா என்ற பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, “ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 கோரிக்கைகள் சேகரிக்கப்பட்டு, அதில் மிக முக்கியமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதில், குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பில், குன்னம் பகுதியில் புதிய பேருந்து பணிமனையுடன் கூடிய புதிய கிளை துவங்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.
அதன்படி, தற்பொழுது குன்னம் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு முக்கிய கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் நிறைவேற்றப்படும். முதற்கட்டமாக 10 பேருந்துகள் இப்பகுதியில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை கூட்டப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மீது பாய்ந்த போக்சோ வழக்கு.. கர்நாடகாவில் பரபரப்பு!