சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புதிதாக எந்த காரணமும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்காததால், ஜாமீன் மனுவை கடந்த 12ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மை தொகைகளை திருத்தி, பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வங்கி பணப் பரிவர்த்தனைகளையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாகவும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் (Pen drive) இருந்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை அமலாக்கத்துறை கணக்கில் கொள்ளவில்லை எனவும், ஆவணத்தில் உள்ள தேதிகளை விசாரணைக்கு ஏற்ற வகையில் அமலாக்கத்துறை மாற்றி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!