கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், எம்.பி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதல் கொடுத்து இருக்கின்றனர். கோயம்புத்தூரில்
இரு தினங்களில் பெய்த மழை காரணமாக, மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பெரிய அளவில் மழை பெய்தாலும் ஒரு சில மணி நேரங்களில் மழைநீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு, பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் முதலே தேவையான பணிகளை செய்து வருகின்றோம்.
கோயம்புத்தூரில் மழைநீர் தேங்கும் இடங்கள் என 6 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றது. அந்த இடங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சுரங்கப் பாதைகளில் மழைநீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதை தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சாரத் துறை பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இதுவரை மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க : வடகிழக்கு பருவமழை: சேலத்தில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு!
மின் கம்பிகள் அறுந்து உயிர் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தபடுகின்றது. மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் கடந்த காலங்களை விட தற்போது குறைந்து இருக்கிறது. வரும் ஆண்டுகளில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்காது.
மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.. பொதுமக்களும் மின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாய்… pic.twitter.com/e4Uo01QdF5
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 14, 2024
தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தபட்டு பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது. அரசியலுக்காக சில பேர் பழைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக முறை முதலமைச்சர் சுற்றுபயணம் செய்த மாவட்டம் கோயம்புத்தூர் தான். இங்குள்ள மக்களுக்கு அளவு கடந்த திட்டங்களை கொடுத்தவர்.
சென்னைக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது. 234 தொகுதிகளையும் தனது தொகுதியாக நினைத்து முதலமைச்சர் செயல்படுகின்றார். இனிவரும் காலத்தில் இன்னும் அதிக திட்டங்கள் கோயம்புத்தூருக்கு வரும்.
துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடந்தி கொண்டு இருக்கின்றனர். பணிகள் தொய்வின்றி நடக்க அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். செய்தி வெளியிட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆய்வுக்கூட்டங்கள் குறித்து சொல்லி இருக்கின்றார். எந்த மாவட்டத்திலும் தொய்வில்லாமல் பணிகள் சென்றடைய அமைச்சர்கள் பணிபுரிந்து வருகின்றனர்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்