சென்னை: சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில், தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாகத்தில் அமைந்துள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு ஜிஎஸ்டி சாலைகளை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுவதால், பேருந்து நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக, குறுக்கே கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைய இருக்கும் மின்சார ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், ஆகாய நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 12) காலை சுமார் ரூ.74.5 கோடி மதிப்பீட்டில், 220 மீட்டர் நீளத்தில் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவும், இதில் 8 மீட்டர் அகலத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக அமைக்கவும், நடைமேம்பாலத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த பூமி பூஜையில், இந்து அறநிலையத்துறை மற்றும் சிஎம்டிஏ துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
மேலும், இந்த நடைமேம்பாலத்தில் எஸ்கலேட்டர்கள், மின் தூக்கிகள், படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளதாகவும், இப்பணிகளை அடுத்த 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், பணிகள் முடிவடைந்தவுடன் மேம்பாலம் திறக்கப்பட்டு, பயணிகள் சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பொழுது போக்கிற்காகவும், பசுமை பரப்பினை ஏற்படுத்தும் நோக்கிலும் ரூபாய் 12.8 கோடி செலவில், சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்று பூங்காவினை அமைச்சர் சேகர்பாபு இன்று (மார்ச் 12) காலை தொடங்கி வைத்தார்.
இப்பூங்காவில் பொதுமக்களுக்கான புத்துணர்ச்சியூட்டும் நடைபாதைகள், அலங்கார பூச்செடிகள், அமரும் இருக்கைகள், குழந்தைகளுக்கான நீரூற்று, சதுரங்க சிற்பங்கள், பாறை பூங்கா, குளம், கால்வாய்கள், இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண விளக்குகள் ஆகியவை இடம் பெற்றுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் களமிறங்கவுள்ள தொகுதிகள் பட்டியல் வெளியீடு!