சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் 'கலைஞர் நூற்றாண்டு' நிறைவு விழாவை முன்னிட்டு, அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வழங்குதல், ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், விழாவில் கலந்து கொண்டவர்கள் சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், "400 சீட்டுகளைப் பெற்று பாஜக மலரும் என்று விதவிதமாக கதை விட்டனர். ஆனால், தமிழக மக்கள் கலைஞர் பக்கம்தான் என்பதை நிரூபித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள சகோதரர்கள் தமிழ்நாட்டில் வந்து வேலை செய்ததால் அவர்கள் சுயமரியாதை என்ன என்பதை உணர்ந்து தேர்தலில் உத்திரபிரதேசத்தில் பாஜகவை பின்னடைய செய்துள்ளனர்" எனக் கூறினார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, "28 லட்சம் மாணவர்கள் நான் 'முதல்வன் திட்டம்' மூலம் பயன்பெற்றுள்ளனர். அதில் கடந்த வாரம் 25 மாணவர்கள் பயிற்ச்சிக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கலைஞர் தீட்டிய திட்டம் உலகம் முழுவதும் வழிகாட்டிய உள்ளது. அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் தலைவர் கலைஞர். இதை நான் கட்சி காரனாக கூறவில்லை" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "தரிகெட்டு ஓடும் பாஜக அரசுக்கு கடிவாளம் போடும் வகையில், நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் செயல்படுவார்கள். அமித்ஷா கண்டித்தாரா இல்லையா என்பது தமிழிசைக்கு மட்டும்தான் தெரியும்.
திருக்கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும், கோயில்களின் சொத்துக்கள் காப்பாற்றவும், கோயிலுக்கு சொந்தமான குளங்கள், தேர்கள், நந்தவனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதை சட்டசபையில் மானிய கோரிக்கைகளாக வைக்கப்படும். ஆன்மீகவாதிகள் சிறக்கும் வகையில் மானிய கோரிக்கையில் விவாதங்கள் வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கோயம்பேடு பள்ளிவாசலை இடிக்க அரசோ அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமோ நினைக்க வில்லை. இது முற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் பள்ளிவாசலை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து மதத்தினரின் புனித தளங்களையும் காப்பாற்றுவது தான் திமுக அரசு" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை கேட்பதில்லை - நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்!