புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 73 ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 29.75 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது, "எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்களை செய்ய தவறிவிட்டார். பெண்களுக்கான நல்லத் திட்டங்களை கொண்டு வர தவறி விட்டார். இன்றைக்கு அந்தத் திட்டங்கள் எல்லாம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருவதால், அவ்வப்போது தான் இருப்பதை வெளிகாட்டி கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதாவது பேசி வருகிறார்.
தேர்தல் பத்திரம் நிலைப்பாடு தொடர்பாக முதலமைச்சர் கருத்து தெரிவித்துவிட்டார். அதுதான் எங்களின் நிலைப்பாடும். தமிழகத்தில் தேர்தல் களம் பாஜக vs திமுக அல்ல, பிஜேபி இன்றைக்கும் தமிழகத்தில் காலூன்ற வில்லை. பணபலத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அவர்கள் கட்சி இருப்பது போன்று பாவனை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வாக்குகளை எண்ணும் போது, அது எந்த சதவீதம் என்பது தெரியும். திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கூட்டணியும் தொட முடியாது. 40க்கு 40 நிச்சயம் வெல்வோம். எங்கள் கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் செயல்படத் தொடங்கிய காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்.. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி!