புதுக்கோட்டை: புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்லத்தில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கிய திமுக-விற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமைச்சர் ரகுபதிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு மரியாதை நிமித்தமாக அமைச்சர் ரகுபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு சால்வை அணிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் தான், நாங்கள் நிம்மதியாகத் தூங்குகிறோம். அவருக்கு தான் தூக்கம் போய்விட்டது. தோல்வி நிச்சயம் என்று தெரிந்து விட்டதால் தான், தமிழ்நாட்டிற்கு மோடி அடிக்கடி வருகிறார்.
நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டு, சிறப்பான தேர்தல் பணியை களத்தில் ஆற்றுகிறோம்.வெற்றிக்கனி எங்கள் கையில் இருக்கிறது என்பதால் அச்சப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பிரதமர் மோடி என்னவெல்லாம் செய்தார் என்பதை அவர் நினைத்துப் பார்க்கட்டும். நாங்கள் யாரையும் இழிவுபடுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
அரசியல் ரீதியாக எதை எதிர்க்க வேண்டுமோ, அதை எதிர்த்து தான் ஆக வேண்டும். கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தான் எதிர்ப்போமே தவிர, தனிப்பட்ட முறையில் எதிர்ப்பது கிடையாது. தமிழ்நாடு ஆளுநர் பிகாரில் போட்டியிடப்போவதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. அந்த செய்தி உண்மை என்றால், அது நல்ல செய்திதான். அவர் அங்கு முதலமைச்சராக உள்ள நிதீஷ்குமாருக்கு போட்டியாகப் போகப்போகிறார் என்ற தகவல் பரவத் தொடங்கியுள்ளது.
ஆரம்பத்தில் இருந்து சிஏஏவை (CAA) எதிர்த்து கொண்டு இருக்கின்ற இயக்கம் திமுக மற்றும் இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் மட்டுமே. சிஏஏவை அமல்படுத்துவதை தடுக்க அதிமுக நினைத்து இருந்தால், தடுத்திருக்க முடியும். ஆனால் பாராளுமன்றத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, இஸ்லாமியர்கள் முன்னாள் அவர்களுக்கு தோழர்கள் என்று நடிக்கிறார்கள்.
அவர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்த சட்டம் நிறைவேறி இருக்காது. இஸ்லாமியர்களுக்கு முழுக்க, முழுக்க எதிரிகள் அதிமுகவினர் தான். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தான். தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் நின்றாலும், அவர் டெபாசிட்டிற்கு போராட வேண்டும். தமிழ்நாட்டில் வடக்கு பகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
எங்களது கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. பலவீணமானவர்களைப் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு அவசியம் கிடையாது. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து குஷ்பூ, நிர்மலா சீதாராமன் ஆகியோரின் விமர்சனத்திற்கு, தமிழ்நாட்டுப் பெண்கள் சரியான பதிலடி வரக்கூடிய தேர்தலில் காண்பிப்பார்கள். ஒரு வாக்கு கூட பாஜக கூட்டணிக்கு போட மாட்டார்கள்.
இதைத் தொடர்ந்து, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "பாஜக நேற்று வரை இந்தியா கூட்டணியை வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று பேசி வந்தது. ஆனால் இன்று, அவர்கள் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் அனைத்தும் வாரிசு கட்சிகள் தான். குறிப்பாக நவீன் பட்நாயக், ஆர்.எல்.டி பஸ்வான் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தற்போது தமிழ்நாட்டில் பாமகவோடு கூட்டணி வைத்துள்ளனர்.
ஆனால் வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சனம் செய்தனர். பாஜகவோடு சேர்ந்தோர் புனிதர்கள், அவர்களை எதிர்த்தால் ஊழல்வாதிகள் என்ற கொச்சையான அரசியலை பாஜக பின்பற்றுகிறது. டெல்லியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு தான், தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என பத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும்.
ஏனென்றால், அதற்கான அதிகாரம் முழுக்கம், முழுக்க காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவிடம் தான் உள்ளது. நான் சிவகங்கையில் போட்டியிட எனது விருப்பமனுவை அளிப்பேன். மோடிக்கு கட்டமைப்பு உள்ளது, அவருக்கென்று போக்குவரத்து உள்ளது, பிரதமர் என்ற பிம்பம் உள்ளது. அதனால் எல்லாம், ரோட் ஷோவை அவர்கள் நடத்துவதால், தேர்தலில் வெற்றியடைய முடியும் என்று சொல்ல முடியாது. பிரதமர் நடத்துகிறார் என்பதால் வேடிக்கை பார்ப்பதற்கு கண்டிப்பாக கூட்டம் வரும்.
மோடியின் ரோட் ஷோவில் மாணவர்களை பயன்படுத்தியது கட்டாயம் தவறு. அதற்குத்தான் தற்பொழுது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு. தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டையும் அவர்கள் மீறி உள்ளனர். பாஜகவிடம் நிறைய விதிமீறல்கள் உள்ளது.
அதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் ஆணையம், நீதித்துறை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்க வேண்டும். பாமகவை சேர்ந்த அன்புமணி, நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறி வந்தார். தற்போது அதே நிலையில் உள்ளாரா? என்பதை அண்ணாமலையிடம் தான் கேட்டு சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் - தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்