சேலம்: வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஆகையால், பருவமழையை எதிர்கொள்ள சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிரட்டும் பருவமழை.. நெல்லையில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
இந்த நிலையில் சேலம் மாநகரில் அவ்வப்போது கனமழை பெய்யும் போது, மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கும் பச்சப்பட்டி, ஆறுமுக நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பருவமழையை எதிர்கொள்ள இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அதி கனமழை காரணமாக குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, சேலம் மாவட்டம் முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இதில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்