சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக எம்.பி. கவுதம சிகாமணி சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
கடந்த 2006-2011ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ்.பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராகச் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
இதன் நகல்கள் கடந்த 2023 நவம்பர் 24 தேதி அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட கவுதம சிகாமணி உட்பட 6 பேரும் நேரில் ஆஜராகி இருந்தனர்.
குற்றப்பத்திரிகை ஆவணங்களில் சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வைத்த கோரிக்கை குறித்து, அமலாக்கத்துறை பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாது - ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டவட்டம்!