சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் விவேகானந்தர் அரங்கில் இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு துவக்கி வைத்தனர். இரண்டாம் உலக தமிழ் வளர்ச்சி மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வாழ்த்து செய்தியும் படிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தியில், "இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு இன்றும், நாளையும் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் பல்துறைத் தமிழ் சான்றோர்களின் பங்களிப்போடு அதே மாநாடு நடைபெறுவது பெரிதும் வரவேற்புக்குரியதாகும். திராவிட இயக்கமும் அதன்வழி பணியாற்றி வரும் நமது திராவிட மாடல் அரசும் தாய் மொழியை வெறும் போற்றுதலுக்குரிய அடையாளமாக பார்க்காமல், அதனை சமூக மேம்பாட்டிற்கான அறிவியல் செறிவு வாய்ந்த, அறிவுக் கருவூலமாகவும் கருதி செயல்பட்டு வருகிறது. அதனால்தான் காலத்திற்கேற்ற தகவமைப்பு திறன் கொண்ட மொழியாக அதனை செழுமைப் படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் இந்த அரசு ஊக்குவித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக இன்று அவர் விட்டு சென்ற பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
அயலக தமிழர் நல வாரியம்: ஒரு தனி துறையையே உருவாக்கி அயலக தமிழர் நல வாரியத்தை உருவாக்கினார். இந்த துறை மூலம் ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
தமிழ் சங்கம் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தருவதாக அங்கு உள்ள மக்கள் தெரிவித்தனர். அதற்கு தமிழக முதலமைச்சர் கடல் தான் நம்மை பிரித்து வைத்துள்ளது மொழி அல்ல என்று சொன்னார். வேர்களைத் தேடி என்ற திட்டத்தை அறிவித்தார்.
ஒரு ஆண்டுக்கு 200 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அழைத்து சென்று தமிழ் தொன்மை, கலாச்சாரம் ஆகியவற்றை அறிய அவர்களை அனுப்பி வைக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் நலனுக்கு நல வாரியம் அமைத்துள்ளார். உலகில் தமிழர்களுக்கு என்ன தீங்கு நடந்தாலும் அவர்களுக்கு உதவும் வகையில் துறை வாயிலாக செயலாற்றி வருகிறோம்" என பேசினார்.
பின்னர் பேசிய அமைச்சர் ரகுபதி, "நாம் நல்வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக தான் சட்டம் உருவாக்கப்பட்டது. தண்டிப்பதற்காக அல்ல. சட்டத்தால் துன்பம் போகிறது. தமிழர் வரலாற்றிலும் சட்டப் பின்னணி உள்ளது.
கடந்த 1973 ஆம் ஆண்டில் தமிழக சட்டக் கல்லூரியில் தமிழ் வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். அதற்காக சட்டபடிப்புக்கு தனி பல்கலைக்கழகமாக அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி.
சடங்குகள் இல்லாத சுயமரியாதை திருமணமும் செல்லும் என்று அண்ணா ஆணை வழங்கினார். மத்திய அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு சொத்தில் அதிகாரம் உள்ளது என்று சொன்னது. அதற்கு முன்னோடியாக கடந்த 1989 ஆம் ஆண்டே பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என சட்டத்திருத்தம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 1997 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழில் முன்னோடி சட்டங்கள் இயற்றியது திராவிட மாடல் அரசு" என்று அமைச்சர் ரகுபதி பேசினார்.
பின்னர் பேசிய அமைச்சர் பொன்முடி, "நாம் படிக்கும் போது எல்லாம் பியூசி படிப்பு ஆங்கிலத்தில் தான் இருந்தது. எஸ்எஸ்எல்சி வரை தமிழ் வழிக் கல்வி தான் படித்தோம். கடந்த 1960-70 களில் தமிழ் வழியில் உயர்கல்வி படிக்க முடியாது. ஆங்கில வழிக்கல்வி தான்.
எஸ்எஸ்எல்சி வரை தமிழில் படித்து விட்டு உயர்கல்வியை ஆங்கிலத்தில் படிக்க சொன்ன போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். நான் கல்லூரியில் படிக்கும் போது சண்முகம் என்ற வேதியியல் பேராசிரியர் எனக்கு பாடம் நடத்தினார். அப்போது கேள்வி கூட தமிழில் கேட்கக் கூடாது ஆங்கிலத்தில் தான் கேட்க வேண்டும் என்றார்.
அண்ணா காலத்தில் உயர்கல்வியில் தமிழ் வழியில் இரு பாடங்கள் படிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் அனைத்து பாடங்களிலும் தமிழ் வழியில் கல்வி வர வேண்டும் என்று சொன்னார். அப்போது கூட கலை - அறிவியல் கல்லூரி பாடங்கள் தான் தமிழ் வழியாக மாறியது.
பொறியியல் பாடங்களில் தமிழ் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடம் பேசி பொறியியல் படிப்பில் முதலில் சிவில், மெக்கானிக்கல் பாடங்களில் மட்டும் தமிழ் கொண்டு வரப்பட்டது. இப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பொறியியல் பாடங்களிலும் தமிழ் வழியில் படிக்கலாம் என்று கொண்டு வந்தார். இங்கு இரு மொழிக் கொள்கையை கொண்டு வர நாங்கள் பட்டப்பாடு வேறு.
இந்தி விவகாரம் : நான் கூட இந்தி மொழி படித்து உள்ளேன். ஆனால், அதை கட்டாயம் என்று சொல்வதை தான் எதிர்க்கிறோம். நமக்கு தாய் மொழி முக்கியம் படிக்க வேண்டும். தமிழ் வேறு தமிழர்கள் வேறு. தெலுங்கர்கள், மலையாளிகள் இங்கு இருந்தாலும் அவர்களும் தமிழ் படிக்கின்றனர்.
1970 காலங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் இருந்தது. இப்போது தமிழில் எழுதலாம் என்று போராடி பெற்றுள்ளோம். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விலிலும் தமிழில் எழுதலாம். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணியில் 20% ஒதுக்கீடு உள்ளது.
சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை தான் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். தமிழ் வழிக் கல்வியில் அவர்கள் படிக்கவில்லை என்றாலும், தமிழை ஒரு மொழிப் பாடமாகவாவது படிக்க வேண்டும் என்று ஏற்பாடுகளை செய்ய காத்திருக்கிறோம்.
தமிழை ஒரு பாடமாகவாவது படித்து இருந்தால் தான் கல்லூரியில் இடம் என்று தனியார் பல்கலைக்கழகங்கள் சொன்னால் அனைவரும் தமிழைக் கட்டாயம் படிப்பார்கள். உயர் கல்வியில் மட்டுமல்ல, ஆரம்ப கல்வியிலும் தமிழை வளர்க்க வேண்டும்.
நான் பேராசிரியராக இருந்த காலத்தில் தமிழ் வழியில் கல்வி வந்துவிட்டது. ஆங்கில வழிக் கல்வி படிக்கும் மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதலாம் என்று சலுகை கொடுத்தவர் கருணாநிதி. மத்திய அரசு தமிழை ஒழிக்க சட்டம் கொண்டு வந்ததை எதிர்த்து வழக்கறிஞர்கள் எல்லாம் போராடினார்கள்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: டீ மொய் விருந்து; வயநாடு மக்களுக்கு கைகொடுக்கும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்! - Tea Moi Feast For Wayanad Fund