சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில கவுன்சில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜே.பிரகாஷ் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் தமிழக அறிவியலறிஞர்கள் விருதுகள் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளாண்மையியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பவியல், கணிதவியல், மருத்துவவியல், இயற்பியல், சமூகவியல், கால்நடையியல் உள்ளிட்ட பிரிவுகளில் 4 ஆண்டுகளில் 40 பேருக்கு தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இந்தியாவிலலே அதிகளவு தமிழகத்ததில் தான் 52 சதவீதம் உயர்கல்வி படிக்கிறார்கள். அதற்காக உருவாக்கப்பட்டது தான் அறிவியல் தொழில்நுட்பம். படிக்கும் போதே வளர வேண்டும். ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும். 10 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளனர். எங்கள் ஊரை சேர்ந்த விஞ்ஞானி முத்துவேல் என்பரும் அதில் உள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: செப்.24 ஆம் தேதி சென்னை பல்கலை. 166வது பட்டமளிப்பு விழா
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் மூலம் பரிசு பெற்ற கல்வியாளர்களுக்கும், அறிவியல் விஞ்ஞானிகளுக்கும் இன்று விருதுகளை வழங்கியுள்ளோம். விரைவில் மற்றவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக (University of Madras) பட்டமளிப்பு விழா ஓராண்டாக நடத்தப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் கன்வீனர் குழு (convener) அமைக்கப்பட்டு அதனை உயர்கல்வித்துறை செயலாளர் கண்காணித்து வருகிறார்.
எனவே, பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை செயலாளர், துணைவேந்தர் என்ற வகையில் துணைவேந்தருக்கு பதிலாக பட்டங்களில் கையெழுத்திடுவார். அதற்கான சட்டபூர்வ ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நாளை நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தான் கலந்து கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.