விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுகவின் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கெளதமசிகாமணி தலைமை வகுத்த நிலையில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" - அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்!
இந்த கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சாராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் விளையாட்டு துறை வளர்ச்சியடைந்திருப்பதை காண முடிகிறது.
செஸ் போட்டிகள் முதல் கார்பந்தயம் வரை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. அடுத்த கார் போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் மாணவர்கள் கல்விக்காக 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர் கல்வி வழிகாட்டல் முகாம் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் விருப்ப கலைகள் பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அறிக்கைபடி ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட உள்ளது. அதன் பேரில் சிலை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கல்வி கொள்கை திட்டங்களில் சிறப்பானதை தமிழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் சிலவற்றை நாங்கள் ஏற்கவில்லை. தமிழகத்தில் உயர்கல்வி சிறப்பானதாக உள்ளது.
75 சதவீத பாடம் பொதுவானதாக இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களின் வளர்ச்சிக்கேற்ப கல்வி திட்டம் வகுக்கபட்டுள்ளது. மாணவர்கள் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும் என்பதால் இரு மொழிக் கல்வியே போதும் என்று கூறுகிறோம். தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்தால், அவர் சிறப்பாக செயல்படுவார். உதயநிதியை துணை முதல்வராக ஆக்குவதற்கு தீர்மானம் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று விழுப்புரம் திமுக பொது செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளோம். மேலும் இன்று காலை நடைபெற்ற முதல்வர் கோப்பை கபடி போட்டியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கபடி விளையாடிய நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.