விழுப்புரம்: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திருவெண்ணெய்நல்லூர், காணை மற்றும் விக்கிரவாண்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 998 பயனாளிகளுக்கு ரூ.35.31 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணையை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், திருவெண்ணெய்நல்லூரில் 249 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 81 லட்சத்து 21 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், காணை ஒன்றியம், கெடார் ஊராட்சியில் 393 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 90 லட்சத்து 82 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரம் ஊராட்சியில், 356 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 59 லட்சத்து 88 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் என மொத்தம் 998 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 200 மதிப்பீட்டில், கழிப்பறையுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காணை ஊராட்சி ஒன்றியம் சித்தேரிப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 105 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை இ-பட்டா வழங்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.147 கோடி மதிப்பீட்டில் 4 ஆயிரத்து 200 புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கி உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். மக்கள் அரசு அலுவலகங்களை நாடிச் சென்ற நிலையை மாற்றி, அரசு மக்களை நாடிச் சென்று குறைகளைத் தீர்க்கும் விதமாக மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நெல்லை தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விவகாரம்: முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!