சென்னை: எழும்பூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 43வது நிறுவன நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், 2024-25ஆம் ஆண்டிற்கான நபார்டு வங்கி ஆண்டு திட்ட மலரை வெளியிட்டு சிறப்பாக பணியாற்றிய வங்கி ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார்.
அப்போது, "தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 43வது நிறுவன தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 1982ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, 43 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வெற்றிநடை போட்டு வருகிறது நபார்டு வங்கி.
1980களில் இருந்த கிராமப்புற கடன் அமைப்பின் குறைகளை நபார்டு வங்கி நிவர்த்தி செய்து, கூட்டுறவு அமைப்பு முறை மற்றும் கிராமப்புற வங்கி முறையை வலுப்படுத்தியதில் நபார்டு வங்கியின் பங்கு மிக முக்கியமானது. மைக்ரோ ஏடிஎம்கள், PoS என்கிற விற்பனை புள்ளி இயந்திரங்கள், மொபைல் வேன்கள், ஃபின்டெக் வசதி, கிராமப்புறங்களில் நிதி விழிப்புணர்வு முகாம்கள், வணிக முகவர்கள் வசதி, கூட்டுறவு பயிற்சி நிறுவனங்கள் மூலம் கூட்டுறவு ஊழியர்களுக்கு பயிற்சி என தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு நிதியுதவி வழங்கி வருகிறது.
மேலும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலராக மாற்ற முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைவதற்கு தெளிவான வியூகம் வகுத்துள்ளோம். இந்த வளர்ச்சிப் பாதையில், சாத்தியமான அனைத்து துறைகளிலும், வழிகளிலும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து நபார்டு வங்கி செயல்பட வேண்டும்.
நபார்டு வங்கி, வேளாண்மை மற்றும் கூட்டுறவு ஆகியவை பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டன. மாறிவரும் பொருளாதாரச் சூழல் மற்றும் பருவநிலை மாற்ற விளைவுகளில், விவசாயிகள் குறிப்பாக குறு விவசாயிகள், கிராமப்புறப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலையில், நபார்டு வங்கியின் பங்கு மிகவும் முக்கியமானது" என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், "கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் நபார்டு வங்கி பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளை காலதாமதம் இன்றி வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கூட்டுறவு வங்கிக் கடன் மற்றும் வரவு செலவு திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கணினிமயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் தொகுதி தேர்தல் வெற்றிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - Case against election results