ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று(பிப்.28) நடைபெற்றது. இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வரும் 1ஆம் தேதி அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பயன்பாட்டுக்கு வலியுறுத்தி விவசாயிகள் முன்னெடுக்க உள்ள போராட்டம் குறித்து விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திட்ட அலுவலர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அனைத்து பணிகள் முடிக்கப்பட்டது. ஆரம்பக் கட்டத்திலிருந்த அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டம் காலதாமதமாகுவதற்கு ஆரம்பக் கட்ட பணிகள் தான் காரணமாக இருந்தது. இது விவசாயிகள் மத்தியில் பேசி தற்போது தீர்வு காணப்பட்டது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் 1045 குளங்களுக்குத் தண்ணீர் செல்வது குறித்து சோதனை வெற்றிகரமாக முடிந்து உள்ளது. வரும் 1ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் குறித்துத் தகவலறிந்து உண்மை நிலவரம் தொடர்பாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
400 கன அடி தண்ணீர் வரும் போது தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். தண்ணீர் வரத்துக் காரணமாகத் தான் திட்டம் தள்ளிப் போடப்படுகிறது. தற்போது 160 கன அடி தண்ணீர் தான் வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டும் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றார்.
சிப்காட் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில், அதற்கான பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்படாத நிலையில் உள்ளதால் அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போன்று, ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.
ஜவுளி பொது சுத்திகரிப்பு நிலையம் 9 தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், தொழிலாளர்கள் நலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் சிப்காட் நிறுவனத்தால் மாசடைந்த நிலத்தடி நீர் உட்பட தண்ணீரைச் சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுமனைகளுக்கு லேஅவுட் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, சான்றிதழ் வாங்கி இருந்தால் எந்த விதமான நிபந்தனை இல்லாமல் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கு அனுமதியை மனுதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு.. மேலும் ஒரு அரசு அதிகாரி பிறழ் சாட்சி..!